×

13 வயது சிறுமியை பலாத்காரம் செய்த எண்ணூர் இன்ஸ்பெக்டர் அதிரடி கைது: உடந்தையாக இருந்த பாஜ செயற்குழு உறுப்பினரும் சிறையில் அடைப்பு

சென்னை: சென்னையில் 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த எண்ணூர் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் அதிரடியாக நேற்று கைது செய்யப்பட்டார். அவருக்கு உடந்தையாக இருந்ததாக பாஜ செயற்குழு உறுப்பினரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த சபீனா என்பவர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அதில் மதன்குமார், ஷாகிதா பானு, செல்வி, சந்தியா, மகேஷ்வரி (எ) மகா, வனிதா, விஜயா, கார்த்திக் ஆகியோர் சேர்ந்து எனது 13 வயதான மகளை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் பிரியதர்ஷினி, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி 8 பேரையும் கைது செய்தார்.

அவர்களிடம் விசாரணை நடத்தியதில், மதன்குமார், ஷாகிதா பானு, செல்வி, சந்தியா ஆகிய 4 பேர் சேர்ந்து சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளனர். மகேஷ்வரி (எ) மகா, வனிதா, விஜயா, கார்த்திக் ஆகிய 4 பேர் புரோக்கர்களாக செயல்பட்டு, வாடிக்கையாளர்களை அறிமுகம் செய்து வந்துள்ளனர் என்று தெரியவந்தது. சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதால், கண்டிப்பாக இதேபோல பல சிறுமிகளை அவர்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியிருக்கலாம் என்று சந்தேகித்தனர். இதனால் கைது செய்யப்பட்ட மதன்குமார், ஷாகிதா பானு, சந்தியா, மகேஷ்வரி, வனிதா, விஜயா ஆகிய 6 பேரை காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அதில், இவர்களை தவிர முத்துப்பாண்டி, அன்சாரி பாஷா, அனிதா, மீனா, கார்த்திக், முஸ்தபா ஆகியோரும் புரோக்கர்களாக செயல்பட்டது தெரியவந்தது. இதனால் அவர்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும், சந்தியாவிடம் விசாரணை நடத்தியதில், வடசென்னை வடக்கு மாவட்ட பாஜவின் செயற்குழு உறுப்பினரும், தொழிலதிபருமான வண்ணாரப்பேட்டை எம்.சி. சாலை, ஜெகநாதன் தெருவைச் சேர்ந்த ராஜேந்திரன் (44) என்பவர் தனக்கு நெருக்கமான நண்பர். அவர் பலமுறை இந்த 13 வயது சிறுமி மற்றும் பல இளம்பெண்களை போலீஸ் அதிகாரிகளுக்கு தேவை என்று அழைத்துச் செல்வார் என்று தெரிவித்தனர். அதை தொடர்ந்து, பாஜவை சேர்ந்த தொழிலதிபர் ராஜேந்திரனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில், எண்ணூர் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டராக உள்ள சி.புகழேந்தி என்பவருக்காக பலமுறை சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுத்தியதாக கூறினார்.
நானும், இன்ஸ்பெக்டரும் கடந்த 15 ஆண்டுகளாக நண்பர்களாக உள்ளோம். கடந்த ஓராண்டாக எண்ணூர் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டராக புகழேந்தி பணியாற்றி வருகிறார். அதற்கு முன்னர் ரெட்ஹில்ஸ் பகுதியில் பணியாற்றினார்.

என்னுடைய அலுவலகத்துக்கு சிறுமியை அழைத்து வருவேன். அங்கு புகழேந்தியும் வருவார். அங்கு வைத்து இருவருமே சிறுமியுடன் உல்லாசமாக இருப்போம் என்று கூறினார். இதை தொடர்ந்து, இன்ஸ்பெக்டரை கைது செய்யலாமா, வேண்டாமா என்ற குழப்பம் போலீசாருக்கு ஏற்பட்டது. ஆனால், போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால், வடசென்னை கூடுதல் கமிஷனர் அருண் ஆகியோர் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர். புகழேந்தியை கைது செய்யவும் உத்தரவிட்டனர். இதையடுத்து, துணை கமிஷனர் ஜெயலட்சுமி மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் பிரியதர்ஷினி நேற்று இரவு இன்ஸ்பெக்டர் புகழேந்தியை கைது செய்தார். பின்னர் அவர் குறித்து விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. இன்ஸ்பெக்டர் புகழேந்தி, போலீஸ் நிலையத்தில் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. தினமும் ஜிம்முக்குச் சென்று உடம்பை முறுக்கேற்றி வைத்திருப்பார். அவர் சிலரை காவல்நிலையத்தில் வைத்து தாக்குவதாகவும் கூறப்படுகிறது.

மேலும், புகார் கொடுக்க பெண்கள் வந்தால் அவர்களது நம்பரை வாங்கி போன் செய்து தொல்லை கொடுப்பாராம். பெண்கள் விஷயத்தில் கடும் வீக்காக இருப்பவர். வாரத்திற்கு ஒரு பெண் இல்லாமல் இருக்க மாட்டாராம். குறிப்பாக, சிறுமிகளுக்கு அதிக அளவில் பாலியல் தொல்லை கொடுத்து வந்தாராம். கஞ்சா வியாபாரிகளிடம் பணம் வாங்கிய புகாரின்பேரில் அவருக்கு அதிகாரிகள் மெமோ ெகாடுத்தனர். இவ்வாறு ஏராளமான புகார்கள் வந்ததை தொடர்ந்துதான், அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்துவது குறித்து அதிகாரிகள் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் புகழேந்தியை, கூடுதல் கமிஷனர் அருண் பரிந்துரையின்பேரில், கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்

Tags : inspector ,executive committee member ,Ennore ,BJP , Ennore inspector arrested for raping 13-year-old girl: BJP executive member jailed for complicity
× RELATED காவலர்கள், அரசு அலுவலர்கள் அஞ்சல் வாக்குப்பதிவு: அதிகாரிகள் ஆய்வு