பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13.75 கிலோ நகை கொள்ளை வழக்கு சிபிஐக்கு மாற்ற பரிந்துரை: புதுகை எஸ்பி தகவல்

புதுக்கோட்டை: பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13.75 கிலோ நகைகள் கொள்ளை, வங்கி உதவியாளர் மாரிமுத்து கொலை செய்யப்பட்ட வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லாததால் சிபிஐக்கு மாற்ற புதுகை மாவட்ட எஸ்பி, டிஜிபியிடம் பரிந்துரை செய்துள்ளார். புதுக்கோட்டை பழைய நகராட்சி அலுவலகம் எதிரே உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடந்தாண்டு ஏப்ரல் 29ம் தேதி ரூ.5.84 கோடி மதிப்புள்ள தங்கநகைகள் கொள்ளை போனது. பின்னர், வங்கியின் அலுவலக உதவியாளரான புதுக்கோட்டை திருகட்டளையை சேர்ந்த மாரிமுத்து எடுத்து சென்று மாயமானதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் கணவர் மாரிமுத்துவை காணவில்லை என அவரது மனைவி ராணி, கணேஷ் நகர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து மாரிமுத்துவை தேடிவந்தனர். இந்நிலையில், மணமேல்குடி அருகே கோடியக்கரை கடல் பகுதியில் கடந்த2019, மே, 3ம்தேதி மாரிமுத்துவை சடலமாக போலீசார் மீட்டனர். அப்பகுதியில் அவரது காரும் மீட்கப்பட்டது. வங்கி நிர்வாகம் 13.75 கிலோ தங்க நகைகளை காணவில்லை என்றும், இதனை மாரிமுத்து திருடியிருக்கலாம் என்றும் புதுக்கோட்டை டவுன் போலீசில் புகார் அளித்தனர். அதன்படி, போலீசார் மாரிமுத்து மீது வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் போலீசார் விசாரணை நடத்தியதில், மாரிமுத்துவின் உறவினர்களுக்கு சொந்தமான தஞ்சை, புதுக்கோட்டையில் தனியார் பைனான்ஸ்களில் மாரிமுத்து அடகு வைத்த நகைகள் மீட்கப்பட்டது. நகைகள் பறிபோன 143 வாடிக்கையாளர்களுக்கு அதன் மதிப்புக்குரிய பணத்தை வங்கி நிர்வாகம் ஒப்படைத்தது. இது தொடர்பாக வங்கி மேலாளர் உள்பட 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. ஒன்றரை ஆண்டுகளாகியும் இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை. கடற்கரையில் மீட்கப்பட்டது மாரிமுத்துவின் உடலா என தடயவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டு இதுவரை உறுதியான முடிவு வரவில்லை. இந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லாததால் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற எஸ்பி பாலாஜி சரவணன் டிஜிபிக்கு பரிந்துரை செய்தார். டிஜிபி அலுவலகம் மூலம் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்யப்படும். பின்னர் இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்படும் என தெரிகிறது.

Related Stories:

>