×

4வது நாள் பிரசாரத்துக்கு புறப்பட்டபோது உதயநிதியை ஓட்டலிலேயே தடுத்து நிறுத்திய எஸ்பி: தொண்டர்கள் குவிந்ததால் பரபரப்பு

கும்பகோணம்: கும்பகோணம் பகுதியில் நேற்று காலை 4வது நாள் பிரசாரத்துக்கு புறப்பட்ட உதயநிதியை ஓட்டலிலேயே எஸ்பி தடுத்து நிறுத்தினார். தொண்டர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், ‘விடியலை நோக்கி ஸ்டாலின்குரல்’ 4ம் நாள் பயணத்தை கும்பகோணம் ஓட்டலில் இருந்து நேற்று காலை துவங்க இருந்தார். இதற்காக ஓட்டல் முன் நிர்வாகிகள் மற்றும் திமுகவினர் திரண்டிருந்தனர். இந்நிலையில் காலை 10.45 மணிக்கு தஞ்சை மாவட்ட எஸ்பி தேஷ்முக் சஞ்சய் சேகர், அந்த ஓட்டலுக்கு வந்து உதயநிதிஸ்டாலின் பிரசாரத்தை ஓட்டலிலே தடுத்து பிரசாரத்தை நிறுத்துமாறு பேச்சுவார்த்தை நடத்தினார்.

பின்னர் 12.25 மணிக்கு எஸ்பி தேஷ்முக் சஞ்சய் சேகர் வெளியே வந்தார். இந்த பேச்சுவார்த்தை 1.40 மணி நேரமாக நடந்தது. பேச்சுவார்த்தை என்ற பெயரில் உதயநிதி ஸ்டாலின் பிரசாரத்தை ஓட்டலிலே எஸ்பி தடுத்த தகவல் அறிந்து ஏராளமான திமுகவினர் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. எனினும் பகல் 12.45 மணிக்கு ஓட்டலில் இருந்து உதயநிதி ஸ்டாலின் பிரசார பயணத்துக்கு புறப்பட்டார். 16 ஜமாத்தார்களுடன் கலந்துரையாடல்: தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே சக்கராப்பள்ளி வாராந்திர காய்கறி சந்தையில் 16 ஜமாத்தார்களுடன் கலந்துரையாடல் கூட்டத்தில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, நான் சென்ற இடமெல்லாம் மக்கள் எழுச்சி, வரவேற்பை பார்த்தேன்.

திருக்குவளையில் பிரசாரத்தை துவங்கியபோது கைது செய்யப்பட்டேன். கலைஞர் இருந்திருந்தால் சந்தோஷப்பட்டிருப்பார். எனது பிரசாரத்துக்கு விளம்பரத்தை அரசு தேடி தந்து கொண்டிருக்கிறது. பாஜக, அதிமுக கூட்டணி உறுதியாகி விட்டது. நமது வேலை சுலபமாகி விட்டது. அமித்ஷா, அடிமை எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி கூற வேண்டும். சிறுபான்மையினரை நாங்கள் சொந்தமாக பார்த்து வருகிறோம். உங்களுக்கு எந்த பிரச்னை என்றாலும் முதலில் வந்து நிற்பது திமுக தான். சிஏஏ போராட்டத்தின்போது தான் எனது முதல் கைது நிகழ்ந்தது. உங்களுக்கு இடஒதுக்கீடு தந்தது கலைஞர் தான். தமிழகத்தை காவி மயமாக்க திமுக விடாது. உங்களது கோரிக்கைகளை திமுக சார்பில் வரும் குழுவிடம் தெரிவியுங்கள். பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் திமுக போட்டியிட வேண்டும் என்ற உங்களது கோரிக்கையை தலைவரிடம் தெரிவிப்பேன். மக்களுக்காக துவங்கப்பட்ட இயக்கம் திமுக. தேர்தலுக்காக மட்டும் மக்களை சந்திப்பது திமுக கிடையாது என்றார்.

Tags : Udayanidhi ,SP ,hotel ,campaign ,volunteers , SP detains Udayanidhi at hotel on the 4th day of campaign
× RELATED திருச்செந்தூரில் திமுக வேட்பாளர்...