இறுதிகட்ட பரிசோதனையில் நிரூபணம் ஆக்ஸ்போர்ட் தடுப்பூசி 90 சதவிகிதம் பலனளிக்கும்: மருந்து தயாரிப்பு நிறுவனம் தகவல்

லண்டன்: ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் தடுப்பூசி இறுதிகட்ட பரிசோதனையில் 90 சதவிகிதம் பலனளித்துள்ளதாக மருந்து தயாரிப்பு நிறுவனமான அஸ்டராஜெனகா தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க உலகம் முழுவதும் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த முயற்சிகள் அனைத்தும் தற்போது இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. அமெரிக்காவின் மாடர்னா மற்றும் பைசர் நிறுவனங்களின் தடுப்பூசிகள் இறுதிகட்ட பரிசோதனையை நிறைவு செய்துள்ளன. மாடர்னா தடுப்பூசி 94.5 சதவிகிதம் பலனளிப்பதாகவும், பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி 95 சதவிகிதம் பலனளிப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதே போல, ரஷ்யாவின் ஸ்புட்னிக் 5 தடுப்பூசி 90 சதவிகிதம் பலனளிப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியாவில் பரிசோதிக்கப்பட்டு வரும் லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழத்தின் கோவிஷீல்ட் தடுப்பூசி 90 சதவீதம் பலன் அளிப்பதாக இறுதிகட்ட பரிசோதனையில் நிரூபணமாகி உள்ளது. இம்மருந்தை சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனம் இந்தியாவில் பரிசோதித்து வருகிறது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், அஸ்ட்ராஜெனகா மற்றும் பில்கேட்ஸ் அறக்கட்டளையுடன் இணைந்து இந்த தடுப்பூசியை கண்டுபிடித்து வருகிறது.

இதன் இறுதி கட்ட பரிசோதனை குறித்து அஸ்ட்ரா ஜெனகாவின் தலைமை நிர்வாக அதிகாரி பாஸ்கல் சொரியாட் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘‘பல்வேறு நாடுகளில் சுமார் 20,000 நோயாளிகளிடம் இந்த தடுப்பூசி பரிசோதிக்கப்பட்டது. முதலில் பாதி டோஸ் வழங்கி, அதன் பிறகு ஒரு மாதம் கழித்து முழு டோஸும் வழங்கி ஆய்வு செய்தோம். இரண்டு கட்டமாக வழங்கி பரிசோதித்ததிலும் பெரிய பக்க விளைவுகள் ஏற்படவில்லை. சுமார் 62 முதல் 90 சதவிகிதம் வரை பலன் தெரிந்தது. இதன் சராசரி பலனளிக்கும் விகிதம் 70.4 சதவிகிதமாக உறுதியாகியுள்ளது. பொது சுகாதார அவசர நிலைக்கு ஏற்றதாக கொரோனா வைரஸை ஆற்றலுடன் உடனடியாகத் தடுக்கும் திறன் கொண்டதாக இருப்பதும் சோதிக்கப்பட்டுள்ளது’’ என்று கூறியுள்ளார். சுமார் 100 கோடி டோஸ்களுக்கு மேல் தயார் செய்து உலகம் முழுவதும் விநியோகிக்க தயாராகி வருவதாகவும் ஆய்வுக்குழுவினர் கூறியுள்ளனர்.

* 50% தள்ளுபடி விலை

ஆக்ஸ்போர்டு -அஸ்ட்ராஜெனகாவின் தடுப்பூசி, வரும் ஜனவரி, பிப்ரவரியில் இந்தியாவுக்கு கிடைக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த தடுப்பூசியை தயாரிக்கும் சீரம் நிறுவனம், மத்திய அரசு அவசரகால அனுமதியை வழங்கினால் இது சாத்தியம் என கூறியுள்ளது. இந்த தடுப்பூசி முதலில் கொரோனாவை எதிர்த்துப் போராடும் முன்கள மருத்துவப் பணியாளர்கள், உள்ளாட்சி பணியாளர்கள் என 2.7 கோடி பேருக்கு போடப்படும். நபர் ஒருவருக்கு இரண்டு முறை தடுப்பூசி போட உச்சபட்ச விலையில் 50% தள்ளுபடி விலையில் தர சீரம் நிறுவனம் தயாராக இருப்பதாக கூறி உள்ளது. இதனால் இதன் விலை ரூ.500 முதல் ரூ.600 மட்டுமே இருக்கும்.

Related Stories:

>