×

உச்ச நீதிமன்றம் ஜனவரியில் இறுதி விசாரணை பேரறிவாளனை விடுவிப்பதில் யாருக்கு உச்சபட்ச அதிகாரம்?

புதுடெல்லி: முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற பேரறிவாளன் முருகன், சாந்தன், நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேரும் கடந்த 29 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளனர். இவர்களை விடுதலை செய்யும் முழு அதிகாரம் மாநில கவர்னருக்கு உண்டு என உச்ச நீதிமன்றம் கடந்த 2018ம் ஆண்டு உத்தரவிட்டது. இந்த நிலையில் பேரறிவாளன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட புதிய மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், பேரறிவாளனை விடுவிக்கும் விவகாரத்தில் ஆளுநர் முடிவு எடுக்காமல் இருப்பது ஏன் என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய கடந்த 3ம் தேதி உத்தரவு பிறப்பித்தது.

கடந்த 21ந் தேதி சிபிஐ தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட புதிய பிரமாணப் பத்திரத்தில்,”பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் சிபிஐக்கு எந்தவிதமான தொடர்பும் கிடையாது. இது தமிழக ஆளுநருக்கும், அவருக்கும் இடைப்பட்டது. பேரறிவாளன் விடுதலை தொடர்பாக சிபிஐ தரப்பிடம் தமிழக ஆளுநர் எந்த விளக்கமும் கேட்கவில்லை’’ என தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நாகேஸ்வரராவ், ஹேமந்த் குப்தா மற்றும் அஜய் ரஸ்தோகி ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,” இந்த விவகாரத்தில் இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் எங்களது தரப்புக்கு தான் உள்ளது’’ என தெரிவித்தார். அதற்கு ஆட்சேபணை தெரிவித்த நீதிபதி நாகேஸ்வரரா, மாநில ஆளுநருக்கு உண்டு எனக்கூறி அதுகுறித்த முந்தைய வழக்கு ஆதாரங்களை வாசித்துக் காட்டினார். இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்,” இந்த வழக்கின் இறுதி விசாரணையை வரும் ஜனவரி மாதத்திற்கு ஒத்தி வைக்கப்படுகிறது. அப்போது பேரறிவாளனை முன்கூட்டியே விடுதலை செய்வதில் யாருக்கு அதிகாரம் உள்ளது என விரிவான இறுதி விசாரணை நடத்தப்படும்’’ என தெரிவித்தார்.

* பரோல் ஒருவாரம் நீட்டிப்பு
நேற்றைய விசாரணையின் போது ஆஜரான பேரறிவாளன் தரப்பு வழக்கறிஞர் பிரபு, “இந்த வழக்கில் பேரறிவாளனுக்கு வழங்கப்பட்டுள்ள பரோல் இன்றோடு (நேற்று) முடிவடைகிறது. அவர் மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள வேண்டியுள்ளதால் பரோலை நீட்டிக்க வேண்டும். மேலும் அவர் சிகிச்சைக்கு செல்லும் போது காவல் பாதுகாப்பு சரிவர இல்லாமல் உள்ளது’’ என தெரிவித்தார். அவரது கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள், பேரறிவாளன் பரோலை மேலும் ஒரு வாரம் நீட்டிப்பதாகவும், அவருக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் தமிழக அரசு செய்து தரவேண்டும் என உத்தரவிட்டனர்.


Tags : Supreme Court ,hearing , Who has the supreme power to release the Supreme Court final hearing in January?
× RELATED மின்னணு வாக்கு எந்திரங்களை வாக்கு...