×

நாட்டின் முன்னேற்றப் பாதையில் அடைய வேண்டிய இலக்குகள் இன்னும் நிறைய உள்ளன: எம்பிக்களுக்கான புதிய குடியிருப்புகளை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேச்சு

புதுடெல்லி: டெல்லியில் எம்பிக்களுக்கான நவீன குடியிருப்புகளை திறந்து வைத்த பிரதமர் மோடி, ‘‘நாட்டின் முன்னேற்றப் பாதையில் அடைய வேண்டிய இலக்குகள் நிறைய உள்ளன’’ என்றார். டெல்லியில் டாக்டர் பிடி மார்க் பகுதியில் இருந்த சுமார் 80 ஆண்டுகளுக்கும் மேல் பழமைவாய்ந்த 8 பங்களாக்கள் மறுசீரமைக்கப்பட்டு 76 அடுக்குமாடி குடியிருப்புக்கள் கட்டப்பட்டன. கொரோனா நோய் தொற்று அச்சுறுத்தல் நிலவிய போதிலும் குறிப்பிட்ட காலக்கெடு நீட்டிக்கப்படாமல் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் சுமார் 14 சதவீதம் சேமிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள 76 அடுக்குமாடி குடியிருப்பு திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸ் மூலமாக கலந்து கொண்டு எம்பிக்களுக்கான புதிய குடியிருப்பை திறந்து வைத்தார். விழாவில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவும் கலந்து கொண்டார்.

திறப்பு விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது: 2014-2019ம் ஆண்டுக்கான 16வது மாநிலங்களவை நாட்டின் முன்னேற்றத்திற்கான வரலாற்று சிறப்புமிக்கதாகவும், 17வது மக்களவையானது ஏற்கனவே எடுத்த முடிவுகளின் அடிப்படையில் வரலாற்றின் ஒரு பகுதியாக மாறியுள்ளது. சிறப்பு அந்தஸ்து தரும் 370வது பிரிவை ரத்து செய்தல், வேளாண் மற்றும் தொழிலாளர் துறைகளை சீர்திருத்துவதை நோக்கமாக கொண்ட சட்டங்களை இயற்றுவதில் மைல்கல்லாகும். நாட்டை முன்னேற்றி கொண்டு செல்வதில் அடுத்த மக்களவை (2024-2029) மிக முக்கிய பங்கு வகிக்கும் என்று நம்புகிறேன். நாட்டில் நாம் அடைய வேண்டிய இலக்குகள் ஏராளமாகும்இவ்வாறு அவர் கூறினார்.

சிறப்பம்சங்கள்
* பசுமை கட்டுமானத்தின் அடிப்படையில் எம்பிக்களின் புதிய குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது. அதாவது, நிலக்கரி சாம்பலில் இருந்து தயாரிக்கப்பட்ட செங்கற்கள் மற்றும் கட்டுமானம் மற்றும் இடிக்கப்பட்ட கழிவுகள், மின்கடத்தா மற்றும் ஆற்றல் செயல்திறனுக்கான இரட்டை மெரூகூட்டப்பட்ட ஜன்னல்கள், எல்இடி விளக்குகள், ஒளி கட்டுப்பாட்டுக்கான சென்சார்கள், ஏர் கண்டிஷனர்கள் உள்ளிட்ட பல பசுமை கட்டிட முயற்சிகள் கட்டுமானத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
* மழைநீர் சேகரிப்பு மற்றும் மேற்கூரையில் சோலார் பேனல்கள் உள்ளிட்ட வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.
* நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்க வரும் எம்பிக்கள் இனி தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள குடியிருப்பில் தங்கி இருந்து கூட்டத்தொடரில் பங்கேற்பார்கள்.

Tags : Modi ,country ,residences ,MPs , There are still a lot of goals to be achieved on the path of progress of the country: Prime Minister Modi talks about launching new residences for MPs
× RELATED நம் நாட்டின் பன்முகத்தன்மை குறித்து...