நீலாங்கரை சார்பதிவாளர் அலுவலகத்தில் விஜிலன்ஸ் ரெய்டு: கணக்கில் வராத 2.12 லட்சம் சிக்கியது

சென்னை: நீலாங்கரை சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய திடீர் சோதனையில் கணக்கில் வராத ரூ. 2.12 லட்சம் சிக்கியது. சென்னை நீலாங்கரை, கஜீரா கார்டன், 2வது தெருவில் சார்பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. சென்னையின் நட்சத்திர பதிவாளர் அலுவலகத்தில் இதுவும் ஒன்று. இந்த அலுவலகத்துக்கு பதிவாளராக வரவேண்டும் என்றால் ரூ.60 லட்சம் முதல் ஒரு கோடி ரூபாய் வரை கொடுத்தால்தான் வர முடியும் என்ற நிலைதான் இதுவரை இருந்தது. இந்த அலுவலகத்துக்கு பதவிக்கு வர கடுமையான போட்டியே ஏற்பட்டது. கடைசியில் வெற்றி பெற்றது, கண்ணன் என்ற சார்பதிவாளர்தான்.இந்த அலுவலகத்தில், போலியான டாக்குமென்ட்டுகளை பதிவு செய்வது, ஒரு இடத்தை 2 பேருக்கு மேல் பதிவு செய்வது, ஒவ்வொரு போலி பதிவுக்கும் பல லகரங்கள் கைமாறுவது என்று ஏராளமான முறைகேடுகள் நடைபெறுவதாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார்கள் வந்தன. இதைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக இந்த அலுவலகத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் கண்காணிக்கத் தொடங்கிவிட்டனர்.

அதன் அடிப்படையில், நேற்று பிற்பகல் சுமார் 2 மணியவில் எஸ்பி தலைமையில் 3 ஏ.டி.எஸ்.பி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். ஒரு சார்பதிவாளர் அலுவலகத்தில் இவ்வளவு பெரிய அதிகாரிகள் டீம் சென்று சோதனை நடத்துவது இல்லை. இப்போதுதான் முதல் முறையாக பெரிய படையே சென்று சோதனையில் ஈடுபட்டது. அப்போது நிலம் விற்பது மற்றும் வாங்குவதற்காக ஏராளமானோர் அலுவலகத்தில் கூடியிருந்தனர். அவர்களிடம் பத்திரப்பதிவுக்கான கட்டணம், முறைகேடாக யாராவது லஞ்சம் வாங்கினார்களா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. பின்னர், அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும், இந்த ரெய்டில் கணக்கில் வராத ₹2,12,000 ரொக்கம் கைப்பற்றப்பட்டது.

இந்த அலுவலகத்தில் கடந்த மாதம் லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் ரெய்டில் ஈடுபட்டு, நிலம் வாங்க மற்றும் விற்பதற்காக பத்திரப்பதிவு செய்ய வந்தவர்களிடம் விசாரணை நடத்தியதும், முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்து எடுத்து சென்றதும்  குறிப்பிடத்தக்கது. ஒரு மாதத்துக்குள் 2 முறை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையிடுவது இதுதான் முதல் முறை என்று கூறப்படுகிறது.

Related Stories:

More
>