சாத்தான்குளம் சம்பவத்திற்கு பிறகும் மணல் மாஃபியாக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் போலீஸ்: நீதிபதிகள் வேதனை

மதுரை: மணல் திருட்டு வழக்கு தொடர்ந்தவருக்கு போலீஸ் பாதுகாப்பு கோரிய வழக்கில், பணம் உள்ளவர்களுக்கு மட்டும் தான் பாதுகாப்பா என்றும் சாத்தான்குளம் சம்பவத்திற்கு பிறகும் போலீசாரின் போக்கில் மாற்றம் இல்லை, மணல் மாஃபியாக்களுக்கு பாதுகாப்பாக செயல்படுகின்றனர் என்றும் நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம், அகரம் பகுதியில் இரவு நேரங்களில் நடக்கும் மணல் திருட்டை தடுக்கக்கோரி பாலகிருஷ்ணன் என்பவர் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்திருந்தார். வழக்கை தொடர்ந்ததால், தன்னை சிலர் மிரட்டுவதாகவும், தனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கக்கோரியும் மேலும் ஒரு மனு செய்திருந்தார். இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட் கிளை போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருந்தது.இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. தூத்துக்குடி எஸ்பி ஜெயக்குமார் வீடியோ கான்பரன்சில் ஆஜராகி விளக்கமளித்தார். அப்போது நீதிபதிகள், ‘‘மணல் கொள்ளை குறித்து வழக்கு தொடர்ந்தவரின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது என்பதால்தான் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

ஆனாலும் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லையே, ஏன்?’’ என்றனர். பின்னர், ‘‘நீதிமன்றத்தின் உத்தரவை போலீசார் எந்தளவிற்கு மதிக்கிறார்கள் என்பது இதன்மூலம் தெரியவருகிறது. தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினர் மீது வடு உள்ளது. சாத்தான்குளம் சம்பவத்தையே மக்கள் இன்னும் மறக்காமல் உள்ளனர் என்பது உங்களுக்கு தெரியுமா? அதற்குள் ஏன் இதுபோன்ற சம்பவங்கள். வழக்கு தொடர்ந்தவருக்கு பாதுகாப்பு வழங்குங்கள் என நீதிமன்றம் உத்தரவிட்டால், தூத்துக்குடி மாவட்ட போலீசோ, மணல் கடத்தல் மாஃபியாக்களுக்கு  பாதுகாப்பாக செயல்படுகிறது என்பது மிகவும் வேதனையானது. பணம் இருப்பவர்களுக்கு மட்டுமே தான் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும் என்றால் ஏழைகள் எங்கே செல்வார்கள். நீதிமன்றத்தின் உத்தரவை மீறுமளவுக்கு எவ்வளவு தைரியம் வந்துள்ளது. சாத்தான்குளம் சம்பவத்திற்கு பின்பும் தூத்துக்குடி போலீசார் தங்களது போக்கை மாற்றிக்கொள்ளவே இல்லை’’ என்றனர். பின்னர் நீதிபதிகள், மனுவின் மீது உரிய உத்தரவு பிறப்பிப்பதாக கூறி ஒத்திவைத்தனர்.

Related Stories:

>