கொடைக்கானல் மலைச்சாலையில் சாய்ந்து விழும் மரங்களால் விபத்து அபாயம்: அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

கொடைக்கானல்: கொடைக்கானல் மலைச்சாலைகளில் சாய்ந்து விழும் மரங்களால் விபத்து அபாயம் நிலவுகிறது. இதனை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கொடைக்கானல்-வத்தலக்குண்டு பிரதான சாலையில் இரண்டு புறமும் சாய்ந்து விழும் நிலையில் நூற்றுக்கணக்கான மரங்கள் உள்ளன. இந்த மரங்கள் மழை காலங்களிலும், புயல் காலங்களிலும் சாலைகளில் விழுந்து போக்குவரத்து தடை ஏற்படுவது வாடிக்கையாக இருந்து வருகிறது. சவுக்கு, குங்கிலிய மரங்கள் மட்டுமே இதுபோன்ற ஆபத்தான நிலையில் உள்ளன.

இந்த வகை மரங்கள் அவ்வப்போது சாலைகளின் குறுக்கே விழுவதால் கொடைக்கானலில் இருந்து அவசர சேவைக்கு ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியவில்லை. இதனால் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். சுற்றுலா பயணிகளும் கொடைக்கானலுக்கு வந்து செல்வதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு செண்பகனூர் மற்றும் டைகர் சோலை பகுதிகளில் சாலையின் குறுக்கே விழும் நிலையில் இருந்த சில மரங்களை நெடுஞ்சாலை துறையினர், வனத்துறையினர் பெயரளவிற்கு அகற்றினர்.

ஆனால், பல இடங்களில் சாலைகளில் ஆபத்தான நிலையில் மரங்கள் உள்ளன. ஊட்டி மலைப்பகுதியில் அந்நிய மரங்களை அகற்ற நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதுபோல கொடைக்கானல் மலை பகுதிகள் மற்றும் மேல்மலை செல்லக்கூடிய சாலையில் ஆபத்தான நிலையிலுள்ள மரங்களை உடனடியாக அகற்ற வேண்டும் என சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>