×

நாமக்கல் அரசு பள்ளி வளாகத்தில் செயல்படும் உழவர்சந்தையை இடமாற்றம் செய்ய அதிகாரிகள் முடிவு: மழை, பனியால் விவசாயிகள் அவதி

நாமக்கல்: நாமக்கல் கோட்டை ரோட்டில் செயல்பட்டு வந்த உழவர்சந்தை கொரோனா பீதியால், கடந்த 7 மாதமாக மோகனூர் ரோட்டில் உள்ள அரசு ஆண்கள் தெற்கு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இயங்கி வருகிறது. தினமும் 100 முதல் 110 விவசாயிகள் காய்கறி, பழங்கள், கீரைகளை கொண்டு வந்து விற்பனை செய்துவிட்டு செல்கிறார்கள். சமூக இடைவெளியுடன் விவசாயிகளுக்கு உழவர்சந்தை அலுலவர்கள் கடைகளை ஒதுக்கியுள்ளனர். தற்போது மழை மற்றும் பனிக்காலம் துவங்கியுள்ளது. இதனால் திறந்தவெளியாக உள்ள பள்ளி மைதானத்தில் கடை போட்டு விவசாயிகள் விற்பனை செய்வதில் பல்வேறு சிரமங்கள் இருக்கிறது.

50வயதுக்கு மேற்பட்ட விவசாயிகள் தான் சந்தைக்கு அதிகம் வந்து செல்கிறார்கள். கடந்த வாரம் கடுமையான மழை பெய்ததால், அரசு பள்ளி மைதானம் முழுவதும் சேறும், சகதியுமாக மாறிவிட்டது. இதனால் சந்தையில் கடை போடவும், வியாபாரம் செய்யவும் விவசாயிகளால் இயலவில்லை. விவசாயிகளின் இந்த நிலையை கண்டு, தற்காலிக சந்தையை நிரந்தரமான உழவர்சந்தைக்கு இடமாற்றம் செய்ய உழவர்சந்தை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து, வருவாய் கோட்டாட்சியரிடம், உழவர்சந்தை அலுலவர்கள் முறையிட்டு, விவசாயிகளின் பிரச்னைகள், சந்தை நடத்துவதில் உள்ள இடையூறுகள் குறித்து தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து இந்த வார இறுதிக்குள் சந்தையை இடமாற்றம் செய்ய அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். இதையொட்டி கோட்டை ரோட்டில் உள்ள உழவர்சந்தை வளாகம் நேற்று சுத்தப்படுத்தப்பட்டது. வருவாய் கோட்டாட்சியரின் உத்தரவு கிடைத்த உடன், சந்தை இடமாற்றம் செய்யப்படும். கோட்டை ரோட்டில உள்ள உழவர்சந்தையில் சமூக இடைவெளி பின்பற்றப்பட்டு விவசாயிகளுக்கு கடைகள் ஒதுக்கீடு செய்யப்படும். அதிகாலையில் நேரமாக வருபவர்களுக்கு உடனடியாக கடை ஒதுக்கப்படும். முடிந்த வரை சந்தையில் கூட்டம் இன்றி மக்கள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக உழவர்சந்தை அலுவலர்கள் தெரிவித்தனர்.

Tags : farmers' market ,premises ,Namakkal Government School , Officials decide to relocate farmers' market at Namakkal Government School premises: Farmers suffer from rain and snow
× RELATED வேதாரண்யத்தில் உழவர் சந்தை