×

சம்பா நெற்பயிரில் இலைகருகல் நோயை கட்டுப்படுத்தி மகசூல் இழப்பை தவிர்க்க ஆலோசனை

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்போது நிலவும் மேக மூட்டமான வானிலை மற்றும் இரவில் அதிக பனிப்பொழிவு காரணமாக சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா நெற்பயிரில் பாக்டீரியா இலைகருகல் நோய் தாக்குதல் ஆங்காங்கு காணப்படுகிறது. இந்த நோயை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தி மகசூல் இழப்பை தவிர்க்கலாம் எனவும், விவசாயிகள் பாக்டீரியா இலைகருகல் நோயைப் பற்றி நன்கு அறிந்து கொண்டு அதனை கட்டுப்படுத்துவது அவசியமாகும் எனவும் வேளாண்மை இணை இயக்குநர் (பொ) பெரியசாமி தெரிவித்துள்ளார். நோய் தாக்கிய நெற்பயிரில் வாடல் மற்றும் இலைகருகல் ஏற்படும். இது பெரும்பாலும் நட்ட 3 முதல் 4 வாரங்களில் அதாவது தூர்பிடிக்கும் பருவத்தில் தோன்றுகிறது. இலைகள் கருகியது போன்று தோன்றும். இலைக்கருகல் நோயின் ஆரம்பநிலையில் மஞ்சள் அல்லது வெளிறிய மஞ்சள் நிறத்தில் நீர்க்கசிவுள்ள புள்ளிகள் இலையின் நுனியில் தோன்றி கீழ்நோக்கி விளிம்புகளில் பரவும். இதனால் இலைநுனி மற்றும் விளிம்புகள் மஞ்சள் நிறமடைந்து காய்ந்து விடுகிறது.

கட்டுப்படுத்தும் முறைகள்:

பாதிக்கப்பட்ட இலைகளைவெட்டி, கண்ணாடி டம்ளரில் உள்ள தெளிவானநீரில் போட்டு பார்க்கும்போது இலையின் சாற்றுக்குழாயில் இருந்து வெண்மை நிறத்திரவமாக பாக்டீரியா வெளியேறும். இந்தநோய் பாசனநீர், மழை மற்றும் காற்று மூலம் பரவுகிறது. வானிலை மப்பும் மந்தாரமுமாக இருக்கும்போதும், தழைச்சத்து அதிகமாக பயன்படுத்தும் போதும் நோய் அதிகஅளவில் பரவுகிறது. இலைக்கருகல் நோயைக் கட்டுப்படுத்த பரிந்துரை செய்யப்பட்ட தழைச்சத்தான யூரியா உரத்தினை மூன்று அல்லது நான்கு முறையாகப் பிரித்து இட வேண்டும். தண்ணீரை வடிகட்டி பின்னர் நீர் பாய்ச்சவும்.

நோயால் பாதிக்கப்பட்ட வயலில் இருந்து மற்றொரு வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதைத் தவிர்க்க வேண்டும். நோயின் தாக்குதல் தென்பட்டால் பசுஞ்சாணத்தை 10 லிட்டர் தண்ணீரில் 2 கிலோ என்ற அளவில் கலந்து ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் கரைசல் தயார் செய்து கைத்தெளிப்பானால் மாலைநேரத்தில் பயிர் நன்கு நனையுமாறு தெளிக்கவேண்டும். இதேபோன்று 10 நாட்கள் இடைவெளியில் இரண்டுமுறை தெளிக்கவேண்டும். பசுஞ்சாணக் கரைசல் தெளிக்கும் முன்புவயலில் தண்ணீரை வடிகட்டிவிடவேண்டும்.

மேலும், ஏக்கருக்கு ஸ்ட்ரெப்டோமைசின் சல்பேட் மற்றும் டெட்ராசைக்ளின் ஹைட்ரோ குளோரைடு கலவையை 120 கிராம் மற்றும் காப்பர் ஆக்சிகுளோரைடு 500 கிராம் ஆகியவற்றை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம். இந்த வழிமுறைகளை கடைபிடிப்பதன் மூலம் பாக்டீரியா இலைக்கருகல் நோய் தாக்குதலை கட்டுப்படுத்தி விவசாயிகள் மகசூல் இழப்பை தடுக்கலாம். மேலும் கூடுதல் விபரங்களுக்கு தங்கள் பகுதி வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தினை தொடர்புகொண்டு பயன்பெறுமாறு வேளாண்மை இணை இயக்குநர் (பொ) பெரியசாமி தெரிவித்துள்ளார்.

Tags : Pudukkottai
× RELATED பெண் போலீஸ் ஏட்டு தற்கொலை