×

அறிவித்து 50 ஆண்டுகளுக்கும் மேலாகிறது: திண்டுக்கல் - குமுளி ரயில் கனவு எப்போது நனவாகும்?

தேனி: தமிழகத்தில் ரயில் சேவை இல்லாத மாவட்டம் என்ற பெயர் தேனி மாவட்டத்திற்கு மட்டுமே உள்ளது. தேனி மாவட்டத்தில் ஏற்கனவே ஓடிக்கொண்டிருந்த மதுரை - போடி இடையிலான மீட்டர் கேஜ் ரயில் சேவை, பிராட்கேஜ் ரயில் சேவையாக மாற்றுவதற்காக 2010ம் ஆண்டு நிறுத்தப்பட்டது. பிராட்கேஜ் ரயில் திட்டப்பணி 10 ஆண்டுகளாக நடந்து வருகிறது.

மதுரை - போடி இடையிலான ரயில் பாதை திட்டப்பணிகள் இன்னும் ஓராண்டு காலத்திற்குள் முடிவடையும் என்ற எதிர்பார்ப்பு தேனி மாவட்ட மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. இருந்தபோதும், 50 ஆண்டுகளுக்கும் மேலாக திண்டுக்கல் - குமுளி இடையிலான ரயில் பாதை வேண்டுமென்ற கனவு நனவாகுமா என்ற எதிர்பார்ப்பும் இன்றளவும் நீடித்து வருகிறது.

கேரள மாநிலம், மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் விவசாயம் சூழ்ந்த மாவட்டமாக தேனி மாவட்டம் உள்ளது. மா, தென்னை, வாழை, கரும்பு, திராட்சை, பருத்தி, காய்கறிகள், பழவகைகள் விளைவிக்கப்படுகின்றன காபி, தேயிலை, மிளகு, ஏலம் கிராம்பு உள்ளிட்ட வாசனைப்பொருட்களும் இம்மாவட்டத்தில் விளைவிக்கப்படுகிறது. இதனால் தமிழகத்தில் வேறெந்த மாவட்டத்திலும் இல்லாத அளவிற்கு விவசாய விளைபொருட்கள் உற்பத்தி என்பது தேனி மாவட்டத்தில் அபரிமிதமாக உள்ளது.

இங்கு விளைவிக்கப்படும் விளைபொருட்கள் தேனி மாவட்டத்தில் இருந்து நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகளில் பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. மேலும், இம்மாவட்டத்தில் நூற்பாலைகள், கைத்தறி நெசவுக்கூடங்கள், உணவுப்பொருள் உற்பத்தி தொழிற்சாலைகளும் உள்ளன. தொழிற்சாலைகளுக்கு தேவையான பருத்தி, கட்டுமான பொருட்கள், மளிகைப்பொருட்கள், கச்சா பொருட்கள் ஆகியவை வெளிமாநிலங்களில் இருந்து நூற்றுக்கணக்கான லாரிகளில் நாள்தோறும் தேனி மாவட்டத்திற்கு வருகிறது.

தேனி மாவட்டத்தில், சரக்கு போக்குவரத்தின் முக்கியத்துவம் கருதி 50 ஆண்டுகளுக்கும் முன்பே திண்டுக்கல்லில் இருந்து வத்தலக்குண்டு, பெரியகுளம், தேனி, சின்னமனூர், கம்பம் வழியாக குமுளி வரை ரயில் பாதை அமைக்க வேண்டுமென வர்த்தக சங்கங்கள் வலியுறுத்தின. 1965ல் ரயில் பாதை அமைப்பதற்காக நிலம் சர்வே செய்யப்பட்டதாகவும், தண்டவாளங்களுக்கு தேவையான தளவாட பொருட்களும் கொண்டுவரப்பட்டதாகவும் தகவல் உள்ளது. ஆனால் காலப்போக்கில் திட்டப்பணி கிடப்பில் போடப்பட்டது.

1993ம் ஆண்டு திண்டுக்கல் - குமுளி இடையிலான ரயில் பாதை திட்டத்திற்கு மத்திய ரயில்வே ஆணையம் திட்ட மதிப்பீட்டு பணியை துவங்கியது. ஆனால் இப்பணியும் இடையிடையே கிடப்பில் போடப்பட்டது. இதன்காரணமாக திண்டுக்கல் - குமுளி ரயில் பாதை திட்டம் தேனி மாவட்ட மக்களின் கனவாகவே நீடிக்கிறது.

விவசாய விளைபொருட்களை வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்லவும், வெளிமாநிலங்களில் இருந்து உற்பத்தி கச்சாப்பொருட்களை தேனி மாவட்டத்திற்கு கொண்டு வருவதிலும் சரக்கு போக்குவரத்து எந்தளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளதோ, அதே அளவிற்கு பயணிகள் போக்குவரத்தும் மிகவும் இன்றியமையாததாக உள்ளது. கேரள மாநிலத்திலுள்ள சபரிமலைக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் தேனி மாவட்டம் வழியாகவே சபரிமலைக்கு சென்று வழிபாடு செய்து திரும்பி வருகின்றனர்.

தொலைதூரத்திலிருந்து கார், பஸ்களில் அதிக செலவு செய்து வரும் சபரிமலை ஐயப்ப பக்தர்கள் திண்டுக்கல் - குமுளி இடையிலே ரயில் பாதை திட்டம் அமைந்தால் மிகக்குறைந்த செலவிலேயே சபரிமலை பயணம் செல்ல வசதி ஏற்படும். திண்டுக்கல் - குமுளி இடையிலான ரயில் பாதை திட்டம் நிறைவேறினால் தற்போது சரக்கு போக்குவரத்திற்கு ஆகும் செலவு கணிசமாக குறையும். இதேபோல தேனி மாவட்டத்தில் இருந்து சென்னை செல்ல பயணச்செலவும் பாதிக்கு மேல் குறையும். அதிலும் வயது முதிர்ந்தோர் மிக எளிதாக உடலுக்கு வசதியாக ரயிலில் பயணித்து செல்ல முடியும் என்பதால் திண்டுக்கல் - குமுளி ரயில் பாதை திட்டம் தேனி மாவட்ட மக்களின் நீண்ட கால கனவாகவே இருந்து வருகிறது. திண்டுக்கல் - குமுளி ரயில் பாதை திட்டத்தை நிறைவேற்ற 2014ல் சுமார் ரூ.800 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டது குமுளி வரை இத்திட்டத்தை நீடித்தால் மலையை குடைந்து செல்ல செலவு அதிகரிக்கும் என்பதால் இத்திட்டத்தை குமுளி மலை அடிவாரமான லோயர் கேம்ப் வரை நிறைவேற்றினாலே போதுமென்ற மனநிலை அதிகாரிகளிடையே உருவாகியுள்ளது.

திண்டுக்கல் - லோயர்கேம்ப் இடையே இத்திட்டத்தை செயல்படுத்த தற்போது ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. மத்திய அரசை பொறுத்தவரை ஒவ்வொரு ஆண்டும் ரயில்வே பட்ஜெட் வெளியிடும்போது தேனி மாவட்டத்தின் கனவு திட்டமான திண்டுக்கல் - குமுளி இடையிலான ரயில் பாதை திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்படுமா என்று எதிர்பார்த்து கவனிப்பதும், இத்திட்டம் பற்றி மத்திய ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்காமல் ஏமாற்றம் மட்டும் ஏற்படுவதும் வாடிக்கையாகவே மாறிப்போயுள்ளது.

Tags : announcement ,Dindigul-Kumuli , Dindigul, Kumuli, Rail
× RELATED பிளாக்பஸ்டர் பார்டர்-கவாஸ்கர் டிராபி:...