×

கொரோனா ஊரடங்கு காரணமாக 8 மாதங்களாக ஆழியாருக்கு சுற்றுலா பயணிகள் வருகை இல்லை

பொள்ளாச்சி: பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பொள்ளாச்சி வன கோட்டத்தில், மானாம்பள்ளி, வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி ஆகிய 4 சரகங்கள் உள்ளடங்கியுள்ளது. இங்குள்ள சுற்றுலா பகுதிகளுக்கு உள்ளூர் மட்டமின்றி வெளியூர்களில் இருந்தும் பயணிகள் அதிகம் வந்து செல்கின்றனர்.

மேலும் பொள்ளாச்சி அருகே பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் உள்ள ஆழியார் அணைக்கு உள்ளூர் சுற்று வட்டார பகுதியிலிருந்தும் கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், பழனி, கேரள உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் அதிகளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இதில் விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் வருகை வழக்கத்தைவிட அதிகளவில் இருக்கும். ஆழியாருக்கு வரும் பயணிகள் அணையின் நீர்தேக்க பகுதியை பார்வையிட்டு, பூங்காவில் குடும்பத்துடன் பொழுதை மகிழ்ச்சியாக கழிக்கின்றனர்.

மேலும் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை படகு சவாரி செய்து மகிழ்வர். தினமும் சுமார் 1000 சுற்றுலா பயணிகள் வரையிலும், விடுமுறை நாட்களில் 2500 சுற்றுலா பயணிகளின் வருகை இருக்கும். ஆனால், மார்ச் 24ம் தேதியிலிருந்து கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைக்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால், ஆழியார் பூங்கா மற்றும் அணைப்பகுதிகளில் சுற்றுலா பயணிகள் இல்லாமல் வெறிச்சோடியது. ஆழியார் அணைப்பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள் மூலம் ஒவ்வொரு மாதமும் சுமார் ரூ.18 லட்சம் வரை வருவாய் இருக்கும்.

இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டதுடன், சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுப்பால், கடந்த 8 மாதத்தில் மட்டும் சுமார் ரூ.1.50 கோடி வரையிலும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது ஆழியார் அணைப்பகுதியில், பொதுப்பணித்துறை ஊழியர்களின் நடமாட்டம் மட்டுமே உள்ளது. ஊரடங்கு உத்தரவு முழுமையாக நிறைவடைந்து, முறையான உத்தரவு வந்தால் மட்டுமே, ஆழியார் ஆணைப்பகுதிக்கு, சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவர். அதுவரையிலும், தடை விதிக்கப்பட்டிருக்கும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Azhiyar ,Corona , Anaimalai
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...