×

வடகாடு மலை பகுதியில் மக்களை அச்சுறுத்தும் யானை கூட்டம்

ஒட்டன்சத்திரம்/பழநி: ஒட்டன்சத்திரம் வடகாடு பகுதியில் 10க்கும் மேற்பட்ட யானைகள் கூட்டமாக திரிவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஒட்டன்சத்திரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மலைகிராமங்களான வடகாடு, பால்கடை, பெத்தேல்புறம், வண்டிப்பாதை, புலிக்குத்திக்காடு உள்பட பல்வேறு மலைகிராமங்களில் காட்டு யானைகள், சிறுத்தைப்புலிகள், மான்கள், காட்டு எருமைகள்,  குரங்குகள், செந்நாய்கள், மலைப்பாம்புகள் என பல உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன.கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஊருக்குள் புகுந்த யானைகள் விவசாய பயிர்களை சேதப்படுத்தின. ரேஷன் கடையை நாசம் செய்தது. சாலையில் செல்லும் வாகனங்களை வழிமறைத்து, அவர்களிடமிருந்து உணவுப் பொருட்களை பறித்து அச்சுறுத்தி வந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக வடகாடு மலைபகுதியில் 10க்கும் மேற்பட்ட யானைகள் கூட்டமாக சாலையில் நின்றுகொண்டு, பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றது.

வனச்சரகர் செந்தில்குமார், வனவர் மகேந்திரன் உள்ளிட்ட வனத்துறையினர் மலைப்பகுதிக்குச் சென்று யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். யானைகள் கூட்டமாக இருப்பதால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. எனினும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும், இரவு நேரங்களில் தேவையில்லாமல் வெளியில் வரவேண்டாம் என்று வனத்துறையினர் எச்சரிக்கை செய்துள்ளனர்.

விவசாயிகள் கூறுகையில், ‘‘பழநி மற்றும் ஒட்டன்சத்திரம் வனப்பகுதியில் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக யானைகள் நடமாட்டம் அதிகளவு இருந்து வருகிறது. இதனைத்தடுக்க வனத்துறையினர் அகழி அமைத்தல், சோலார் மின்வேலி அமைத்தல், வேட்டை தடுப்பு காவலர்களை பயன்படுத்துதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொண்டனர். இந்நிலையில் பழநி வனப்பகுதியில் தேக்கந்தோட்டம், ஆண்டிபட்டி பகுதிகளில் வனப்பகுதிகளில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டுள்ளன.

அதுபோல் யானைகள் நடமாட்டம் அதிகளவு உள்ள ஒட்டன்சத்திரம் வனப்பகுதிக்கு உட்பட்ட சத்திரப்பட்டி வரையிலான பகுதிகளுக்கு இடையேயான 22 கிலோமீட்டர் தூர பகுதியில் நான்கு கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்தால் யானைகள் நடமாட்டத்தை கண்காணிக்க முடியும். சட்டப்பாறை, வரதாபட்டிணம், கோம்பைபட்டி, உள்கோம்பை ஆகிய இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைப்பதன் மூலம் யானைகள் நடமாட்டம் மட்டுமின்றி, வெளியாட்கள் நடமாட்டம் போன்றவற்றையும் கண்காணிக்க முடியும்’’ என கோரிக்கை விடுத்தனர்.

Tags : Vadakadu ,hills , Elephant herd
× RELATED வாக்கு சாவடிக்குள் புகுந்து வாக்காளர்களை விரட்டிய குடிமகனால் பரபரப்பு