×

வில்லியனூர் அருகே மருத்துவ கழிவுகளை அழிக்கும் தொழிற்சாலை புகையால் காற்று மாசு

வில்லியனூர்: புதுச்சேரி வில்லியனூர் அடுத்த துத்திப்பட்டில் தனியார் தொழிற்சாலை உள்ளது. இத்தொழிற்சாலையில் மருத்துவ கழிவுகள் அழிக்கப்பட்டு வருகின்றன. அப்போது மருத்துவமனைகளில் உள்ள உயிரிகழிவுகள், இதர கழிவு பொருட்கள், பிளாஸ்டிக் கழிவு பொருட்கள் ஆகியவற்றை கொண்டு வந்து, அவற்றை தனித்தனியாக பிரித்து எடுக்காமல் ஒட்டுமொத்தமாக ஒரே இடத்தில் வைத்து அழித்து வருகின்றனர். அவ்வாறு அழிக்கும்போது கழிவுகளில் கலந்திருக்கும் ரசாயன திரவங்கள் வெளியாகும் புகையில் கலந்து அடர்த்தியான சாம்பல் படிந்த நச்சு கரும்புகை வெளியேறி வருகிறது. மேலும் நச்சுத்தன்மை கரும்புகையில் அடர்த்தி அதிகமாக இருப்பதால் அவை மேல் நோக்கி செல்லாமல் தரைப்பகுதிலேயே படர்ந்து வெளியேறி காற்றுடன் கலக்கிறது.

இதனால் துத்திப்பட்டு மட்டுமின்றி தொழிற்சாலைக்கு அருகே உள்ள காட்டேரிக்குப்பம், வழுதாவூர் சந்தை, புதுகுப்பம், புதுப்பாக்கம் மற்றும் அவ்வழியே செல்லும் பொதுமக்கள் என அனைவரும் மிகக்கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். மக்களுக்கு மூச்சுத்திணறல் மற்றும் பல்வேறு வகையான நோய்த்தொற்று உருவாகும் அபாயகரமான சூழ்நிலை ஏற்படுகிறது.

மேலும், மருத்துவமனைகளில் இருந்து வாகனத்தின் மூலம் கொண்டு வரப்படும் உயிரிகழிவுகள் மற்றும் அறுவை சிகிச்சை உபகரணங்களும், மனிதர்களுக்கு செலுத்தும் ஊசி போன்ற இதர பொருட்களும் ரத்தக்கறையுடன் வழிநெடுகிலும் சிதறி சாலையோரங்களில் கிடக்கிறது. இவற்றின் மூலம் பொதுமக்கள் மற்றும் கால்நடைகளுக்கும் நோய் தொற்றும் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் இத்தொழிற்சாலை அரசு அங்கீகரித்து வழிகாட்டிய நெறிமுறைகளை பின்பற்றி கழிவுகளை அழிக்காமல் அனைத்து கழிவுகளையும் ஒன்றாக சேர்த்து ஒட்டுமொத்தமாக அழிப்பதால் காற்று மாசு மற்றும் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன.

எனவே மருத்துவமனையில் இருந்து கொண்டு வரும் கழிவு பொருட்களை தனித்தனியாக பிரித்து உயிரி கழிவுகளை தனியாகவும், மற்ற பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுப்பொருட்களை தனியாகவும் பிரித்து, அதன் பிறகு, அரசு வழிகாட்டி உள்ள வழிமுறைகளை பின்பற்றி, அவற்றை அழிக்கும் வேலையை மேற்கொள்ள வேண்டும் என்றும், சுகாதாரம், பாதுகாப்பை கருத்தில் கொண்டு அதிகாரிகள் உடனடியாக இத்தொழிற்சாலையில் ஆய்வு மேற்கொண்டு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Villianur , Air pollution
× RELATED வில்லியனூர் அருகே முன்விரோத தகராறில் வாலிபர் அடித்து கொலை