×

திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவிக்கு பக்தர்களை அனுமதிக்கக் கோரிக்கை

உடுமலை:  உடுமலைக்கு அருகில் மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் திருமூர்த்திமலை அமணலிங்கேசுவரர் கோயில் அமைந்துள்ளது. இயற்கை எழில் சூழ்ந்த பாலாற்றங்கரையில் அமைந்திருக்கும் இந்த கோயிலுக்கு தமிழகம் மட்டுமல்லாமல் கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர்.

இதுதவிர கோயிலுக்கு மேலே சுமார் ஒரு கிலோ மீட்டர் உயரத்தில் மலையில் அமைந்திருக்கும் பஞ்சலிங்க அருவி, கோயிலுக்கு அருகிலுள்ள திருமூர்த்தி அணை, படகு சவாரி, வண்ண மீன் காட்சியகம், நீச்சல் குளம், சிறுவர் பூங்கா உள்ளிட்டவற்றால் ஆண்டு முழுவதும் இங்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து செல்வர்.

ஆனால், கொரோனா தொற்றால் விதிக்கப்பட்ட ஊரடங்கால் அமணலிங்கேஸ்வரர் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல பல மாதங்களாக தடை விதிக்கப்பட்டிருந்தது. அதேநரத்தில், தற்போது கோயில் திறக்கப்பட்டுள்ள நிலையிலும் பஞ்சலிங்க அருவிக்கு செல்ல அனுமதி மறுக்கப்படுவதால் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைகின்றனர்.

தற்போது பல பகுதிகளில் இருந்து ஐயப்ப பக்தர்கள் திருமூர்த்திமலை வருகின்றனர். மேலும், பஞ்சலிங்க அருவியில் சீராக நீர் வரத்து ஆர்ப்பரித்துக் கொட்டி ரம்மியமாக காட்சியளிக்கிறது. மேற்குத் தொடர்ச்சி மலையிலுள்ள கொட்டை ஆறு, பாரப்பட்டி ஆறு, வண்டி ஆறு, குருமலை ஆறு, கிழவிபட்டி ஆறு, உப்புமண்ணம்பட்டி ஆறு உள்ளிட்ட ஆறுகள் மூலமாக பெறப்படும் நீர் மூலிகை காற்றுடன் கலந்து அருவியில் கொட்டுகிறது.

இந்த அருவியில் குளிப்பதற்கும் இயற்கை காட்சிகளை ரசிப்பதற்கும் ஆர்வமுடன் வரும் சுற்றுலா பயணிகளை கட்டுப்பாடுகளுடன் பஞ்சலிங்க அருவியில் குளிக்க அனுமதிக்க வேண்டும் என அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags : devotees ,Thirumurthymalai Panchalinga Falls , Thirumurthymalai
× RELATED திருப்பதி கோயிலில் பக்தர்கள் கூட்டம்: 18 மணிநேரம் காத்திருந்து தரிசனம்