×

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் கசப்பு தன்மையில்லாத பழுபாகற்காய்

வேதாரண்யம்: சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் கசப்பு தன்மையில்லாத பழுபாகற்காய் கோடியக்கரையில் கிலோ ரூ.120க்கு விற்பனை செய்யப்படுகிறது. வேதாரண்யம் தாலுகா கோடியக்காரையில் 25 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் பசுமை மாறாக்காடுகள் அமைந்துள்ளது. இந்த காட்டில் 154 மூலிகை செடிகள் உள்பட 271 வகையான தாவரங்கள் உள்ளது. இதில் பலா, நாவல், கருந்துவரை, வாசா, காசான் போன்ற மரங்களும் உள்ளன. இந்த காட்டில் 17 சதவீத மரங்களும், 43 சதவீதம் மூலிகைகளும், 25 சதவீதம் புதர்களும், 16 சதவீதம் கொடிகளும் உள்ளன. கொடி வகையை சேர்ந்த பழுபாகற்காய் என்று அழைக்கப்படும் கசப்பில்லாத பாகற்காய் அதிகளவில் இயற்கையாக இந்த காடுகளில் விளைந்து வருகிறது.

இந்த பாகற்காய் விதை மூலம் உற்பத்தி செய்யாமல் ஆண், பெண் கிழங்கு எனப்படும் கிழங்கின் மூலம் பரவுகிறது. இந்த பாகற்காய்களை முன்பெல்லாம் அங்கு வசிக்கும் ஆதிவாசிகள் காட்டுக்குள் சென்று இடம் அறிந்து பாகற்காய்களை பறித்து வெளியில் விற்பனைக்கு கொண்டு வந்தானர். சில ஆண்டுகளாக வனத்துறையினர் இந்த பாகற்காய்களை எடுத்து செல்ல அனுமதிக்காமல் அங்குள்ள பறவைகளுக்கு பயன்படும் வகையில் பாதுகாத்து வந்தனர். தற்போது, வேதாரண்யம் பகுதியில் உள்ள கருப்பம்புலம், கத்தரிப்புலம், செம்போடை ஆகிய பகுதிகளில் விவசாயிகள் காட்டிலிருந்து இந்த பழுபாகற்காய் விளையும் ஆண், பெண் கிழங்கு களை எடுத்து வந்து பயிரிட்டு அதிகளவில் விளைவித்தனர்.

இந்த பாகற்காய் பார்ப்பதற்கு பலாபிஞ்சு போல் காட்சியளிக்கிறது. கசப்பில்லாதது இந்த பழுபாகற்காயை இறால், மாமிசத்துடன் சேர்த்து அசைவ பிரியர்கள் சமைத்து உண்பார்கள். சைவ பிரியர்களும் இதை சாம்பார் மற்றும் வறுவல் செய்து சாப்பிடுகிறார்கள். இந்த பகுதியிலிருந்து வெளியூரில் வாழும் தங்களது உறவினர்களுக்கு பழுபாகற்காயை கொடுத்து அனுப்புகின்றனர். இந்த கசப்பில்லாத பழுபாகற்காய் வேதாரண்யம் காய்கறி கடைகளில் கிலோ ரூ.100 முதல் 120 வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த பழுபாகற்காய் அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரை மட்டும் தான் விளையும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

காடுகளில் இயற்கையாக விளையும் பழுபாகற்காய் மிகுந்த ருசியாகவும், சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் தன்மை உடையதாகவும் உள்ளது. ஆனால் தற்போது விவசாயிகள் தங்கள் வீடுகளில் வளர்க்கும் பழுபாகற்காய் தோட்டத்திற்கு செயற்கை உரம் மற்றும் மருந்து அடிப்பதால் அதன் இயற்கையான தன்மையை இழந்துவிட்டது. சென்ற ஆண்டு கஜாபுயல் வீசியதால் கோடியக்கரை வனப்பகுதி முற்றிலும் அழிந்துவிட்ட நிலையில் பழுபாகற்காய் கொடிகளும் அழிந்துவிட்டன. இதனால் பழுபாகற்காய் வரத்துமிக குறைவாக உள்ளது. கிலோ ரூ.120 என்றாலும் பொதுமக்கள் இதனை விரும்பி வாங்கி செல்கின்றனர்.

Tags : Bitter gourd
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...