×

கொரோனாவால் பஸ், ரயிலில் பயணம் செய்ய அச்சம்: பழைய கார் விற்பனை 30 சதவீதம் அதிகரிப்பு

சேலம்: கொரோனா தொற்று காரணமாக பஸ், ரயிலில் பயணம் செய்ய அச்சம் காரணமாக, பழைய கார்களின் விற்பனை 30 சதவீதம் அதிகரித்துள்ளதாக பழைய கார்களை வாங்கி விற்கும் விற்பனையாளர்கள் தெரிவித்தனர். இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் கொரோனா தொற்று ஏற்பட்டது. இதன் காரணமாக மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஜூன் மாதத்தில் இருந்து நடப்பு மாதம் வரை பல்வேறு கட்டங்களில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் பஸ்கள் தொடர்ந்து இயக்கப்பட்டு வருகிறது. அதேபோல் கடந்த மாதம் 16ம் தேதி முதல் ஆம்னி பஸ்களும் இயக்கப்படுகிறது. பஸ்கள் இயக்கப்பட்ட போதிலும் கொரோனா அச்சத்தால் பஸ்களில் பயணம் செய்ய இன்னும் 50 சதவீதம் பேர் தயக்கம் காட்டி வருகின்றனர். தற்போது அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே பொதுமக்கள் பஸ், ரயில்களில் பயணம் செய்து வருகின்றனர். கொரோனா அச்சம் காரணமாக சிலர் பஸ், ரயில்களில் பயணம் செய்வதை தவிர்க்கிறார்கள். மேலும், தங்கள் சொந்த உபயோகத்திற்காக பழைய கார்களை வாங்குவதை அதிகரித்துள்ளனர். அந்த வகையில், தமிழகம் முழுவதும் கடந்த மூன்று மாதமாக பழைய கார்களின் விற்பனை சற்று அதிகரித்துள்ளதாக பழைய கார்களை வாங்கி, விற்கும் விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து சேலத்தை சேர்ந்த பழைய கார் விற்பனையாளர்கள் கூறியதாவது: தமிழகம் முழுவதும் பழைய கார்களை வாங்கி, விற்கும் வியாபாரிகள் நூற்றுக்கணக்கில் உள்ளனர். பொதுவாக கார் வாங்குபவர்கள் ஒரு சில குறிப்பிட்ட காலம் வரை உபயோகிவிட்டு, மீண்டும் புது கார்களை வாங்கும்போது, தங்களிடம் உள்ள பழைய காரை விற்றுவிடுவார்கள். இதுபோன்ற கார்களை வாங்கும் விற்பனையாளர்கள், அந்த கார்களை பழுது பார்த்து அவர்கள் ஒரு குறிப்பிட்ட தொகை லாபம் வைத்து வாடிக்கையாளர்களுக்கு விற்று வருகின்றனர். கடந்த சில ஆண்டாக பழைய கார்களின் விற்பனை எதிர்பார்த்த அளவில் விற்பனை இல்லாமல் இருந்தது. ஆனால் கொரோனாவுக்கு பிறகு பழைய கார்களின் விற்பனை சற்று அதிகரித்துள்ளது. பஸ், ரயில்களில் பயணம் செய்வோர், கொரோனாவுக்கு பயந்து பஸ், ரயிலில் பயணம் செய்வதை தவிர்த்து வருகின்றனர். இதுபோன்றவர்கள் தங்கள் சொந்த உபயோகத்திற்காக பழைய கார்களை நாடி வருகின்றனர்.

தமிழகத்தில் கடந்த மூன்று மாதத்தில் பழைய கார்களின் விற்பனை வழக்கத்தைவிட 30 சதவீதம் அதிகரித்துள்ளது. கார் உபயோகத்தை பொறுத்து விலை நிர்ணயிக்கப்படுகிறது. ஒரே ஓனர், குறைந்த வருடம் என்றால் அந்த காருக்கு தனி விலையாகும். பலரது உபயோகத்தில் இருந்தது, 5, 10 ஆண்டுகள் என்றால் அதுபோன்ற கார்களுக்கு வேறு விலையில் விற்கப்படுகிறது. பொதுவாக வருடம் குறைந்த கார், ஒரே ஓனர் கார்களை வாங்குவதை வாடிக்கையாளர்கள் அதிகளவில் விரும்புகின்றனர்.

இதுபோன்ற பழைய கார் மூலம் ரீ பெயிண்ட் அடிப்பது, இன்ஜின் பழுது பார்ப்பது, சீட் கவர் மாற்றுவது உள்பட பலருக்கு வேலைவாய்ப்பு கிடைத்து வருகிறது. ஒரு காரின் விலை அதன் உபயோகத்தை பொறுத்து ₹75 ஆயிரத்திலிருந்து ₹5 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : Corona , Car sales
× RELATED மேற்படிப்பை முடித்த பின் அரசு...