நாகர்கோவில் காவல்கிணறு 4 வழிச்சாலை பயன்பாட்டிற்கு வராத அவலம்

நாகர்கோவில்: நாகர்கோவில் காவல்கிணறு நான்கு வழிச்சாலையில் மின்வாரியம் மற்றும் வனத்துறையால் 600 மீட்டர் மட்டுமே மேற்கொள்ள வேண்டிய பணிகள் முடியாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. குமரியில் 4 வழிச்சாலை நாட்டிலேயே முதல்முறையாக பிரதமர் வாஜ்பாய் அடிக்கல் நாட்டினார். குமரியை தவிர்த்து நாடு முழுவதும் 4 வழிச்சாலைகள் போடப்பட்டு விட்டன. ஆனால், குமரியில் இன்னமும் இழுவையாக உள்ளது. நீண்ட சட்ட போராட்டத்திற்கு பின்னர் கடந்த ஆண்டுதான், மதுரை கன்னியாகுமரி சாலை இணைப்பு முழுமையானது.

இந்நிலையில், காவல்கிணறு, நாகர்கோவில் கன்னியாகுமரி - திருவனந்தபுரம் தடத்தில் பணிகள் 70 சதவீதம் முடிவடைந்து விட்டது. குளங்களில் பாலம் அமைப்பது உள்பட சில பகுதிகளில் பிரச்சனைகள் காரணமாக மிகவும் மந்தமாகியுள்ளது. இச்சாலையில் முதல் கட்டமாக காவல்கிணறு முதல் நாகர்கோவில் வரை 16 கி.மீ சாலையில் பணிகள் முடிவடைந்து விட்டது. நாகர்கோவில் நாக்கால்மடம் பகுதியில் கோதண்டராமன் குளத்தில் 600 மீட்டர் பாலம் அமைத்தால் திருநெல்வேலி - நாகர்கோவில் சாலை முற்றிலும் பயன்பாட்டிற்கு வந்து விடும்.

இதனால், போக்குவரத்து நெரிசல், பயண நேரம் வெகுவாக குறையும். ஆனால், வனத்துறை மற்றும் மின்துறை அதிகாரிகள் அலட்சியத்தால் கடந்த ஒரு ஆண்டாக இச்சாலை பயன்பாட்டிற்கு கொண்டு வர முடியாமல் உள்ளது. கோதண்டராமன்குளம் பறவைகள் சரணாலயத்தில் சேர்க்கப்பட்டுள்ளதால், அது ெபாதுப்பணித்துறையிடம் இருந்து வனத்துறை வசம் சென்று விட்டது. எனவே வனத்துறை மற்றும் மத்திய சற்றுச் சூழல் துறை அனுமதி வழங்க வேண்டும். இதற்கான அனுமதி விரைவில் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. இதுபோல், மின்வாரியமும், நான்கு வழிச்சாலையில் உயர்மட்ட மின்கம்பங்கள் நடவேண்டும். இதற்கு மாவட்ட அதிகாரிகள் நினைத்தால் போதும். ஆனால், தற்போது நிதி இல்லை. இனி மார்ச் மாதம் நிதி ஒதுக்கீடு வந்த பின்னர்தான் மின்கம்பம் நடுவோம் என மாவட்ட மேற்பார்வை பொறியாளர் மற்றும் நெல்லை முதன்மை பொறியாளர் ஆகியோர் கை விரித்து விட்டனராம்.

மே மாதம் சட்ட மன்ற தேர்தல் அறிவிப்பு வந்தால், அதன் பின்னர் தேர்தல் நன்னடத்தை விதிமுறை காலம் முடிவடைந்த பின்னரே நிதி ஒதுக்கி பணிகள் தொடங்க முடியும். இதனால், நகாய் அதிகாரிகள் செய்வது அறியாது திகைத்து போய் உள்ளனர். இந்த 600 மீட்டர் பணிகள் முடிவடைந்து விட்டால் நெல்லையில் இருந்து நாகர்கோவிலுக்கு ஒரு மணி நேரத்திற்குள் வந்துவிட முடியும். போக்குவரத்து நெரிசலும் வெகுவாக குறையும். நெல்லை மற்றும் குமரி மாவட்ட மக்களின் பிராதான சாலையான இந்த சாலை பணியை விரைவாக முடிக்க மாவட்ட நிர்வாகம் முயற்சி மேற்கொள்ள சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>