×

சென்னையில் இடி மின்னலுடன் கன மழை: தமிழகத்தில் 6 மாவட்டங்களில் நாளை அதீத கனமழைக்கு வாய்ப்பு...வானிலை மையம் அறிவிப்பு.!!!

சென்னை: தமிழகத்தில் நாளை நவம்பர் 24-ம் தேதி 6 மாவட்டங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில், நேற்று  தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி. இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக நிவர் வலுவடைந்து, அதனை  தொடர்ந்து 24 மணி நேரத்தில் தீவிர புயலாக வலுவடைந்து, வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் 25-ம் தேதி பிற்பகலில் காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே புதுவைக்கு அருகே கரையை கடக்க கூடும்.

காலை 8.30 மணி நிலவரப்படி சென்னைக்கு தென்கிழக்கே சுமார் 590 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது மணிக்கு சுமார் 15 கிலோமீட்டர் வேகத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. நாளை கடலோர  மாவட்டங்களில் காற்று மணிக்கு 80 லிருந்து 90 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 100கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். நாளை மறுநாள் புயல் கரைக் கடக்கும்போது காற்று மணிக்கு 100 லிருந்து 110 கிலோ மீட்டர் வேகத்திலும்  இடையிடையே 120 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

இதன் காரணமாக, இன்று 23-11-2020 நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும், ஏனைய கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில்  லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை 24-11-2020 தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய அதி கனமழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்,  செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், வேலூர், ராணிப்பேட்டை,  திருவண்ணாமலை, கள்ளிக்குறிச்சி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலாள இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

நாளை மறுநாள் 25-11-2020 நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், கள்ளிக்குறிச்சி , விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் அதி கன மழையும்,  தஞ்சாவூர், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, கரூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக  கனமழையும், ஈரோடு, சேலம், நாமக்கல், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும்  பெய்யக்கூடும்.

26-11-2020 வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், ஏனைய வட மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

27-11-2020 தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

நவம்பர் 23  தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல்   சூறாவளி காற்று மணிக்கு 55 முதல் 65 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 75 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

நவம்பர் 24 தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தமிழக, தெற்கு ஆந்திர கடலோரப்பகுதி சூறாவளி காற்று மணிக்கு 80 முதல் 90 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 100 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

நவம்பர் 25 தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தமிழக, தெற்கு ஆந்திர கடலோரப்பகுதி சூறாவளி காற்று மணிக்கு 100 முதல் 110 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 120 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.


Tags : districts ,Chennai ,Weather Center ,Tamil Nadu , Heavy rain with thunder and lightning in Chennai: Chance of heavy rain in 6 districts in Tamil Nadu tomorrow ... Weather Center announcement. !!!
× RELATED தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் அடுத்த 3...