×

வேலூரில் ரூ.500 கள்ள நோட்டு புழக்கம்: கைவரிசை காட்டும் வடநாட்டு கும்பல்

வேலூர்: வேலூரில் வடநாட்டு கும்பல் மூலம் ரூ.500 கள்ளநோட்டு புழக்கம் அதிகரித்துள்ளதாகவும், இதில் அதிகமாக வயதானவர்களே பாதிக்கப்பட்டுள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது. வேலூர் ஆற்காடு சாலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வயதான முதியவரின் இளநீர் கடைக்கு வந்த வடநாட்டு டிப்டாப் ஆசாமிகள் 5 இளநீர்களை வாங்கியுள்ளனர். அதற்கான பணத்தை ரூ.500  நோட்டாக வழங்கியுள்ளனர். அப்போது கடையில் மேலும் சிலர் இளநீருக்காக காத்திருந்ததால், முதியவரும் நோட்டை பெற்றுக் கொண்டு மீதி தொகையை அந்த ஆசாமிகளிடம் வழங்கியுள்ளார்.

தொடர்ந்து அன்று இரவில் அவருக்கு இளநீர் சப்ளை செய்பவர் வந்து தான் சப்ளை செய்ததற்கான இளநீருக்கான பணத்தை பெற்றார். அவரிடம் சப்ளை செய்யப்பட்ட இளநீருக்கான பணத்தை எண்ணி வழங்கியுள்ளார். அதில் அவரிடம் டிப்டாப் ஆசாமிகள் வழங்கி சென்ற ரூ.500 தாளும் இருந்துள்ளது. பணத்தை பெற்று எண்ணிய இளநீர் சப்ளை செய்தவர் முதியவர் வழங்கிய ரூபாய் நோட்டுகளில் ரூ.500 கள்ள நோட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். இதுதொடர்பாக முதியவரிடம் அவர் கேட்டபோது, ‘இந்தி பேசிய 2 பேர் வந்து இளநீர் வாங்கி சென்றதாகவும், அவர்கள் வழங்கிய பணம்தான் இது’ என்றும் அவர் கூறியுள்ளார். வடநாட்டு ஆசாமிகள் வழங்கிய ரூபாய் நோட்டு ஜெராக்ஸ் எடுக்கப்பட்டு நல்ல நோட்டு போலவே அதன் பக்கவாட்டில் உலோக தாளும் பசைப்போட்டு ஒட்டப்பட்டிருந்தது. மேலும் மெழுகால் காந்தியின் உருவமும் அச்சிடப்பட்டிருந்தது.

நல்ல நோட்டுகளை ஜெராக்ஸ் எடுத்து அதை பக்காவாக வெட்டி, நல்ல நோட்டு போல உருவாக்கி நகரில் பிளாட்பார பழக்கடைகள், தள்ளுவண்டி கடைகள், அதிக கூட்டம் கூடும் கடைகள் குறிப்பாக வயதான முதியவர்கள் இருக்கும் கடைகளாக பார்த்து ரூபாய் நோட்டுகள் வேலூரில் மாற்றப்படுவதாகவும், இதனால் அப்பாவிகள் பலர் பாதிக்கப்படுவதாகவும் சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே, காவல்துறை வேலூரில் நடமாடும் கள்ளநோட்டு ஆசாமிகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மொத்தமாக மாற்றுவது குறைவு

முன்பெல்லாம் ‘டபுளிங்’ என்ற வார்த்தையால் அழைக்கப்படும் கள்ளநோட்டு பரிமாற்றம் பெரிய அளவில் பெரிய தொகையாக நடக்கும். இந்த வகை கள்ளநோட்டு பரிமாற்றம் மீது கண்காணிப்பு தீவிரமடைந்த நிலையில், கள்ளநோட்டு மொத்த பரிமாற்றம் என்பது பெருமளவு குறைந்துள்ளது. தற்போது இதுபோன்ற கும்பல்களை வைத்து கமிஷன் அடிப்படையில் சில்லரை நோட்டுகளாக வைத்து கடைகளில் மாற்றிவிடுவதாகவும் காவல்துறை தரப்பு தெரிவிக்கிறது. எனவே, பொதுமக்கள் கள்ளநோட்டு ஆசாமிகள் விஷயத்தில் விழிப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டியது அவசியம் என்கின்றனர் காவல்துறையினர்.

Tags : Vellore ,Northern ,gang , fake money
× RELATED வட மாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு...