×

புறநகர் மின்சார ரயில்களில் இன்று முதல் பெண்களுக்கு அனுமதி: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: புறநகர் மின்சார ரயில்களில் பெண்கள், விளையாட்டு வீரர்கள், தேர்வுக்கு செல்லும் மாணவர்கள், நேர்காணலுக்கு செல்பவர்கள் மற்றும் வியாபாரம் செய்யும் பெண்கள் இன்று முதல் பயணிக்கலாம் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கை: அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் அத்தியாவசிய பணியாளர்களுக்கு தெற்கு ரயில்வே தினசரி 244 புறநகர் சிறப்பு மின்சார ரயில்களை இயக்கி வருகிறது. இன்று முதல் அத்தியாவசிய பணிகள் பட்டியலின்கீழ் வராத பெண் பயணிகளை சாதாரண நேரங்களில் திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரையிலும் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நாள் முழுவதும் பயணிக்க ரயில்வே நிர்வாகம் அனுமதியளிக்கிறது.

மாதாந்திர பயணச்சீட்டு அல்லது சாதாரண பயணச்சீட்டு மூலம் பெண் பயணிகள் சிறப்பு ரயிலில் பயணிக்கலாம். ரயில் டிக்கெட்டுகளை பெண் பயணிகள் சாதாரண நேரங்களில் தாங்கள் புறப்படும் ரயில் நிலையங்களிலிருந்தே பெற்றுக்கொள்ளலாம். மேலும் தேர்வில் கலந்துகொள்ளும் மாணவர்கள், நேர்காணலுக்கு செல்பவர்கள் அது தொடர்பான அதிகாரிகள் வழங்கிய கடிதத்துடனும், வியாபாரம் செய்யும் பெண்கள் முன்பதிவு அலுவலகத்தில் வழங்கப்பட்ட பயணச்சீட்டுகள், விளையாட்டு வீரர்கள் பயிற்சி மற்றும் செயல் திறன் நோக்கத்திற்காக தங்களுடைய சங்கம் மற்றும் நிறுவனங்களில் இருந்து பெறப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட கடிதங்களுடன் இன்றுமுதல் மின்சார ரயில்களில் பயணிக்கலாம்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பீக் ஹவர்சில் தடை
அத்தியாவசிய பணியாளர் பட்டியலின்கீழ்  வராத பெண் பயணிகள் திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை காலை 7 மணி முதல் 10  மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் பயணிக்க அனுமதி இல்லை. மற்ற நேரங்களில் மட்டுமே பயணிக்க வேண்டும்.


Tags : women , Admission for women on suburban electric trains from today: Southern Railway Announcement
× RELATED கஞ்சா கடத்திய 2 பெண்கள் கைது