பூடான் எல்லைக்குள் 2 கி.மீ தூரம் ஊருடுவி டோக்லாம் வரை சாலை அமைத்தது சீனா

புதுடெல்லி: பூடான் எல்லையில் 2 கிமீ தூரம் வரை ஊருடுவி, சீனா குட்டி கிராமத்தை அமைத்திருப்பது புதிய செயற்கைகோள் படத்தின் மூலம் உறுதியாகி உள்ளது. சிக்கிம் மாநிலம், டோக்லாம் எல்லையில், கடந்த 2017ம் ஆண்டு இந்தியா - சீன படையினர் நேருக்கு நேர் சந்தித்தனர். அப்பகுதியை ஆக்கிரமிக்க முயன்ற சீனாவின் முயற்சியை இந்தியா முறியடித்தது. இதனால், 7 மாதங்களுக்கு மேல் அங்கு போர் பதற்றம் நிலவியது. அப்போது, இந்திய ராணுவத்தின் எதிர்ப்பால் சீன எல்லைக்கு உட்பட்ட ஜோம்பெல்ரி குன்றுப் பகுதிகளில் சாலை அமைக்கும் சீன ராணுவத்தின் முயற்சியும் கைகூடாமல் போனது.

இந்த சம்பவம் நடந்து 3 ஆண்டுகளுக்குப் பிறகு சீனா குள்ளநரித்தனமாக பூடான் எல்லையை ஆக்கிரமித்து சாலை மட்டுமின்றி சிறு கிராமத்தையே அமைத்திருக்கும் அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகி உள்ளது. டோக்லாமை ஒட்டி பூடான் எல்லையில் 2 கிமீ தூரத்திற்கு ஆக்கிரமித்த சீனா, பாங்டா என்ற கிராமத்தையும் அதில் குடியிருப்புகளையும் கட்டியிருப்பதாக சீன பத்திரிகையாளர் ஒருவர் சமீபத்தில் டிவிட்டரில் தகவல் வெளியிட்டார். ஆனால், இத்தகவலை பூடான் அரசு மறுத்தது. சீனா எந்த நிலப்பகுதியையும் ஆக்கிரமிக்கவில்லை என கூறியது. ஆனால், சீனா புதிய கிராமம் அமைத்திருக்கும் புதிய செயற்கைகோள் வரைபடம் தற்போது வெளியாகி உள்ளது.

அதில் டோக்லாம் பகுதியை ஒட்டி டோர்சா ஆற்றை ஒட்டிய பள்ளத்தாக்கு பகுதியில் சீனா குடியிருப்புகளை அமைத்துள்ளது. அதோடு, ஆற்றை ஒட்டி 9 கிமீ தூரத்திற்கு சாலை கட்டமைப்புகளையும் செய்து வருகிறது. இந்த சாலையின் மூலம் டோக் லாவில் உள்ள இந்திய ராணுவ முகாமை சீன ராணுவம் எளிதில் நெருங்க முடியும். இந்த சாலையின் மூலம் தனது எல்லையில் இருந்து படைகளையும், ஆயுதங்களையும் டோக்லாமை ஒட்டி இந்திய எல்லை அருகே மிக விரைவில் எளிதாக நகர்த்த முடியும். இந்த புதிய சாலை 2017ல் டோக்லாம் மோதல் நடந்த இடத்திலிருந்து 10 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

Related Stories: