சம்பா மாவட்டத்தில் ராணுவம் கண்டுபிடிப்பு தீவிரவாதிகள் ஊடுருவல் செய்ய பாக். எல்லையில் சுரங்கப்பாதை

ஜம்மு: இந்தியாவுக்குள் தீவிரவாதிகள் ஊடுருவல் செய்வதற்காக சர்வதேச எல்லையில் அமைக்கப்பட்டுள்ள சுரங்கப்பாதைகளை கண்டுபிடித்து அழிக்கும் பணியில், இந்திய ராணுவம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் வரும் 28ம் தேதி முதல்,  ஜம்மு வளர்ச்சி கவுன்சில் தேர்தல் நடக்கிறது.இதை  சீர்குலைப்பதற்காக  கடந்த வியாழக்கிழமை லாரியில் பதுங்கி வந்த  ஜெய்ஷ் இ முகமது அமைப்பை சேர்ந்த 4 தீவிரவாதிகளை பாதுகாப்பு படைகள் சுட்டுக் கொன்றன. இவர்கள், சர்வதேச எல்லையில் உள்ள சம்பா மாவட்ட எல்லை வழியாக ஊடுருவி வந்ததாக விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, இந்த மாவட்டத்தில் பாகிஸ்தான் அருகே உள்ள சர்வதேச எல்லையில் சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டுள்ளதா என்பதை கண்டுபிடிப்பதற்கான தேடுதல் வேட்டையில் ராணுவம் ஈடுபட்டுள்ளது. இதில், நேற்று ஒரு இடத்தில் பாகிஸ்தானில் இருந்து சம்பா பகுதிக்கு பெரிய சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதேபோல், கடந்த ஆகஸ்ட் 28ம் தேதியும் இதே பகுதியில் ஒரு பெரிய சுரங்கப்பாதை கண்டுபிடிக்கப்பட்டது. இவை, தீவிரவாதிகள் ஊடுருவலுக்கான பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இதை தகர்க்கும் பணியில் பாதுகாப்பு படைகள் ஈடுபட்டு வருகின்றன.

* எல்லை கிராமங்கள் மீது தாக்குதல்

ஜம்மு காஷ்மீர் எல்லையில் உள்ள கிராமங்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் சமீப காலமாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இந்திய ராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில், நேற்று காலையும் பல்வேறு பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் தாக்கியது. ரஜோரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று அதிகாலை 3.45 மணி முதல், சிறிய ரகக குண்டுகளையும், நவீன துப்பாக்கிகளையும் பயன்படுத்தி தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு, இந்திய ராணுவமும் பதிலடி கொடுத்தது. ஜம்மு காஷ்மீரில் இந்தாண்டு மட்டும் 4 ஆயிரம் முறை பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தி உள்ளது. இது, கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகமாகும். கடந்தாண்டு 3,289 முறை அது தாக்குதல் நடத்தியது.

Related Stories:

>