கேரள முதல்வர் பினராய் விஜயன் பேட்டி பத்திரிகை சுதந்திரத்துக்கு எதிரான சட்டம் அல்ல

திருவனந்தபுரம்: ‘புதிதாக கொண்டு வரப்பட்டுள்ள அவசர சட்டம் பத்திரிகை சுதந்திரத்திற்கு எதிரானது அல்ல,’ என்று கேரள முதல்வர் பினராய் விஜயன் கூறினார். சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துக்கள், மிரட்டல் விடுப்பவர்களுக்கு எதிராக கேரள அரசு அவசர சட்டம் கொண்டு வந்துள்ளது. இந்த சட்டத்திற்கு கேரள கவர்னர் ஆரிப் முகமதுகான் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த சட்டத்தின்படி தனிப்பட்ட நபர்களுக்கு எதிராக அவதூறு கருத்துக்கள் பரப்புபவர்கள், மிரட்டல் விடுப்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும். 5 வருடம் சிறை தண்டனை, 10 ஆயிரம் அபராதம் அல்லது 2ம் சேர்த்து விதிக்கப்படும். மேலும், இந்த புதிய சட்டத்தின்படி பத்திரிகை, டிவி.க்களுக்கு எதிராக கூட நடவடிக்கை எடுக்க முடியும். இந்த சட்டத்திற்கு கேரளா முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

எதிர்க்கட்சியினரும், பல்வேறு அமைப்பினரும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எதிர்க்கட்சியினரை பழி வாங்கவும், உள்ளாட்சி தேர்தல் நெருங்குவதால்தான் இந்த புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது என்றும் கேரள எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னித்தலா தெரிவித்துள்ளார். இந்நிலையில், கேரள முதல்வர் பினராய் விஜயன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கேரளாவில் ெகாண்டு வரப்பட்டுள்ள அவசர சட்டம் பத்திரிகை சுதந்திரத்திற்கு எதிரானது அல்ல. சமூக வலைதளங்கள் மூலம் சிலர் எல்லை மீறி தனிப்பட்ட நபர்களை தரக்குறைவாக தாக்குவதாகவும், ஆபாசமான கருத்துக்களை தெரிவித்ததாகவும் அரசுக்கு ஏராளமான புகார்கள் வந்தன. இதன் காரணமாக ஏராளமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இது போன்ற நபர்கள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படும்,’ என கூறியுள்ளார்.

Related Stories:

>