கோவையில் விவசாயிகள் பாதுகாப்பு எழுச்சி மாநாடு ஏர்கலப்பை யாத்திரை சென்ற காங்கிரசார் கைது: போலீசுடன் தள்ளுமுள்ளு

கோவை: கோவையில் காங்கிரஸ் கட்சியின் விவசாயிகள் பாதுகாப்பு எழுச்சி மாநாடு நேற்று நடந்தது. இதையொட்டி, தடையை மீறி ஏர்கலப்பை யாத்திரையை மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி துவக்கி வைத்தார். இதையடுத்து மாநில பொறுப்பாளர் குண்டுராவ் உள்பட 100 பேர் கைது செய்யப்பட்டனர். கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் விவசாயிகள் பாதுகாப்பு எழுச்சி மாநாடு கருமத்தம்பட்டியில் நேற்று நடந்தது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை தாங்கினார். மாநில செயல்தலைவர் மோகன் குமாரமங்கலம் மாநாட்டின் துவக்க உரையாற்றினார்.

தமிழக காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், அகில இந்திய செயலாளர்கள் சஞ்சய்தத், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராமசாமி, முன்னாள் மாநில தலைவர்கள் ஈவி.கே.எஸ். இளங்கோவன், கே.வி.தங்கபாலு, திருநாவுக்கரசர், ஜோதிமணி எம்பி, ஈசன், செல்வபெருந்தகை, கோபண்ணா, கர்நாடக மாநில முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில், ரூபி ஆர்.மனோகரன் உள்பட பலரும் பேசினர். இதன்பின்னர், விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும். அழிந்து வரும் விவசாய தொழில், நிலைகுலைந்துபோன விசைத்தறி தொழில் ஆகியவற்றை பாதுகாக்க வேண்டும், தொழில்துறை புத்துணர்ச்சி அடையும் வகையில் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இம்மாநாட்டில், 10 ஆயிரம் பேர் அமரும் வகையில் பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெருமளவில் திரண்டதால் பந்தல் நிரம்பி வழிந்தது. தமிழ்நாடு காங்கிரஸ் பொதுச்செயலாளர் டி.செல்வம் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். மாவட்ட பொருளாளர் ஆர்.பி.முருகேசன் நன்றி கூறினார். தள்ளுமுள்ளு-கைது: மாநாடு நிறைவடைந்ததும் ஏர்கலப்பை யாத்திரையை துவக்கிவைக்க கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட  தலைவர்கள், பந்தலை விட்டு வெளியே வந்தனர். அப்போது, அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார், யாத்திரைக்கு அனுமதி இல்லை என்றனர்.

அதையும் மீறி ஏர்கலப்பை யாத்திரையை கே.எஸ்.அழகிரி துவக்கி வைத்தார். அப்போது, போலீசுக்கும், காங்கிரஸ் கட்சி தொண்டர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, போலீசார் காங்கிரஸ் கட்சியின் மேலிட பார்வையாளர் தினேஷ் குண்டுராவ், செயல்தலைவர் மோகன் குமாரமங்கலம், ஜோதிமணி எம்.பி. உள்பட 100 பேரை கைது செய்தனர். சுமார் ஒரு கி.மீ தொலைவில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்கவைத்தனர். அரை மணி நேரத்துக்குப்பின் அனைவரையும் விடுவித்தனர்.

Related Stories:

>