ரூ.800 கோடி விசாரணைக்கு பயந்து கிராமத்தைவிட்டே காலி செய்த துரைக்கண்ணு உதவியாளர்

சென்னை: துரைக்கண்ணுவிடம் ஆளுங்கட்சியினர் கொடுத்த ரூ.800 கோடி விசாரணைக்கு பயந்து, அவரது பினாமியும், உதவியாளருமான ஒருவர் கிராமத்தை விட்டே காலி செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மறைந்த வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணுவிடம் கட்சியை பலப்படுத்த, கட்சி தலைமை கொடுத்த ரூ.800 கோடியில் 50 சதவீதம் மீட்கப்பட்டுள்ளது. மீதி 50 சதவீத பணத்தை மீட்க கட்சி தலைமை விசாரணையை முடுக்கிவிட்டுள்ளது. துரைக்கண்ணுவின் பர்சனல் உதவியாளராக கபிஸ்தலம் பவுண்டு கிராமத்தை சேர்ந்த ஒருவர் இருந்துள்ளார். அவரது சமூகத்தை சேர்ந்த இவர், பினாமியும், நெருக்கமானவருமாக இருந்துள்ளார். இவர் துரைக்கண்ணுவின் பலத்தை பின்புலமாக வைத்து அவருக்காக ரவுடியிசம், கட்டப்பஞ்சாயத்து,  எதிரானவர்களை மிரட்டுவது என அதிகாரம் செய்து வந்துள்ளார்.

துரைக்கண்ணுவுக்கு தண்ணீர் முதல் சாப்பாடு வரை என அனைத்தையும் உடனிருந்து கவனித்து வந்தவர். இவரை மீறி யாராலும் துரைக்கண்ணுவை நெருங்க முடியாத அளவுக்கு பலத்துடன் இருந்துள்ளார். இதனால் துரைக்கண்ணு மூலம் கால்நடை துறையில் ஒரத்தநாட்டில் உதவியாளராக (மெசஞ்சர்) அரசு பணியில் சேர்ந்தார். தற்போது மாற்று பணியில் (ஓ.டி) உள்ளார். ரூ.800 கோடி விவகாரம் தொடர்பாக போலீசார் துரைக்கண்ணுவுக்கு நெருக்கமானவர்கள், பினாமிகளை கைது செய்து விசாரித்து வருவதால் தன் மீது சந்தேகம் ஏற்படலாம் என போலீசாருக்கு பயந்து அவர் அந்த கிராமத்தை விட்டே காலி செய்து தற்போது கஞ்சனூரில் 3 மாடி கொண்ட அடுக்குமாடி குடியிருப்பை வாங்கி அங்கு வசித்து வருவதாக கூறப்படுகிறது.

Related Stories:

>