×

நிட்டோ ஏடிபி பைனல்ஸ் கோப்பையை கைப்பற்ற தீம் - மெட்வதேவ் பலப்பரீட்சை: ஜோகோவிச், நடால் அதிர்ச்சி

லண்டன்: நிட்டோ ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு சாம்பியன் யார் என்பதை தீர்மானிக்கும் பரபரப்பான இறுதிப் போட்டியில் இளம் வீரர்கள் டொமினிக் தீம் (ஆஸ்திரியா) - டானில் மெட்வதேவ் (ரஷ்யா) மோதுகின்றனர். ஏடிபி டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆண்டு இறுதி தரவரிசைப் பட்டியலில் டாப் 8 இடங்களைப் பிடித்த வீரர்கள் மோதும் ஏடிபி டூர் பைனல்ஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்க தகுதி பெறுவதே டென்னிஸ் வீரர்களுக்கு மிகவும் பெருமையான விஷயமாக இருந்து வரும் நிலையில், 50வது ஆண்டு பொன் விழா தொடரின் புதிய சாம்பியன் யார் என்ற கேள்விக்கு விடையளிக்கும் இறுதிப் போட்டி இன்று நடைபெறுகிறது.

டோக்கியோ 1970, லண்டன் 2020 என 2 பிரிவுகளில் நடந்த லீக் சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடித்த நோவாக் ஜோகோவிச் (செர்பியா), டொமினிக் தீம் (ஆஸ்திரியா), ரபேல் நடால் (ஸ்பெயின்), டானில் மெட்வதேவ் (ரஷ்யா) ஆகியோர் அரை இறுதிக்கு முன்னேறினர். நட்சத்திர வீரர் ரோஜர் பெடரர் (சுவிஸ்) முழங்கால் மூட்டு காயம் காரணமாக இந்த தொடரில் விளையாடாதது குறிப்பிடத்தக்கது. நேற்று முன்தினம் நடந்த முதல் அரை இறுதியில் நம்பர் 1 வீரர் ஜோகோவிச்சுடன் 3வது ரேங்க் வீரரான டொமினிக் தீம் மோதினார். மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டியில் தீம் 7-5, 6-7 (10-12), 7-6 (7-5) என்ற செட் கணக்கில் 2 மணி, 54 நிமிடம் போராடி வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

இரண்டாவது அரை இறுதியில் ரபேல் நடால் - மெட்வதேவ் மோதினர்.முதல் செட்டை 6-3 என்ற கணக்கில் கைப்பற்றி முன்னிலை பெற்ற நடால், 2வது செட்டிலும் 5-4 என்ற முன்னிலையுடன் மேட்ச் பாயின்ட் வரை சென்றார். எனினும், மன உறுதியுடன் கடுமையாகப் போராடிய மெட்வதேவ் 3-6, 7-6 (7-4), 6-3 என்ற செட் கணக்கில் வெற்றியை வசப்படுத்தி பைனலுக்கு தகுதி பெற்றார். இதனால் டூர் பைனல்ஸ் கோப்பையை முத்தமிட வேண்டும் என்ற நடாலின் கனவு மீண்டும் கலைந்தது. டாப் 2 வீரர்கள் அரை இறுதியில் அதிர்ச்சி தோல்வியடைந்து ஏமாற்றத்துடன் வெளியேறிய நிலையில், முதல் முறையாக சாம்பியன் பட்டம் வெல்லும் முனைப்புடன் டொமினிக் தீம் - டானில் மெட்வதேவ் பலப்பரீட்சையில் இறங்குகின்றனர்.

Tags : Nito ATP Finals ,Nadal , Theme to win the NITO ATP Finals trophy - Medvedev Multipurpose: Djokovic, Nadal shock
× RELATED ஆஸி. ஓபன் டென்னிஸ் காயத்தால் விலகினார் நடால்