×

நாட்டை நாசப்படுத்தி-தமிழகத்தை வஞ்சிக்கும் சக்திகளுக்கு தேர்தலில் பலமான அடியை மக்கள் வழங்குவார்கள்: தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: “நாட்டை நாசப்படுத்தி-தமிழகத்தை வஞ்சித்து வரும் சக்திகளுக்கு, 2019 நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் தமிழக மக்கள் எத்தகைய அடி கொடுத்தார்களோ, அதைவிட பலமான அடியை வர உள்ள சட்டசபை தேர்தலில் வழங்குவார்கள்” என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: கோட்டையில் திமுகவின் ஆட்சி நடைபெற்று 10 ஆண்டுகள் ஆகப் போகிறது. ஆனால், மக்களின் மனக்கோட்டையில், என்றென்றும் ஆண்டு கொண்டிருப்பது திமுக தான். தமிழக மக்களுக்கும், திமுகவிற்குமான உறவு என்பது மலைக்கோட்டைகளை விட வலிமையானது.

நாம் எடுத்து வைக்கின்ற அடி தான், ஆட்சியாளர்கள் மீதான சம்மட்டி அடியாக விழுகிறது. அதன்பிறகே, அதிமுக ஆட்சியாளர்கள் துயில் கலைந்து மெல்ல அசைகிறார்கள் என்பதற்கு, மருத்துவக்கல்லூரியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% முன்னுரிமை இடஒதுக்கீடு தொடர்பாக, ஆளுநர் மாளிகை முன்பு, திமுக நடத்திய மாபெரும் கண்டனப் பேரணியே சாட்சியாகும். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் ஒதுக்கியதால், அவர்களின் பெற்றோர் படும்பாட்டை உணர்ந்து, அத்தகைய மாணவர்களின் கல்விக்கட்டணத்தை திமுக ஏற்கும் என நான் அறிவிப்பு வெளியிட்டு, அது ஊடகங்களில் வெளியாகி, மக்களின் மனதில் பதிவாகி, வரவேற்பைப் பெற்ற பிறகே, கட்டணத்தை அரசு ஏற்கும் என ஆட்சியாளர்களிடமிருந்து திடீர் அறிவிப்பு வருகிறது.

அதனால்தான் சொல்கிறேன், கோட்டையில் அதிமுக இன்னும் சில மாதங்கள் இருக்கலாம். மக்களின் மனதில் குடிகொண்டிருப்பதும், அவர்களின் குறை தீர்ப்பதும், திமுகவே. ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ எனும் தலைப்பில், தமிழகத்தின் மூலை முடுக்கெங்கும் சென்று சேர்ந்து எதிரொலித்திடும் வகையில், எதிர் வரும் 75 நாட்களில், 15 திமுக முன்னணியினர் பங்கேற்று, 234 தொகுதிகளையும் உள்ளடக்கிய 15 ஆயிரம் கிலோ மீட்டர் பயணத்துடன் 1500 கூட்டங்கள், 500-க்கும் அதிகமான உள்ளூர் நிகழ்வுகள், 10 லட்சம் நேரடிக் கலந்துரையாடல்கள் எனும் மகத்தான பயணத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயணம் மூன்று கட்டமாக நடைபெறுகிறது.

முதற்கட்டமாக, தலைவர் கலைஞர் பிறந்த திருக்குவளையிலிருந்து இளைஞரணிச் செயலாளர் உதயநிதி, நவம்பர் 20ம் தேதி தனது பரப்புரையைத் தொடங்கினார். இது ஆள்வோரின் கண்களை உறுத்தியதால், உடனடியாக அவரைக் கைது செய்து அற்பத்தனமான அதிகார பலத்தைக் காட்ட முயற்சித்தது. திமுகவின் பரப்புரை பயணத்திற்கு அனுமதி மறுக்கிறது. இளைஞரணிச் செயலாளர் உதயநிதி தனது பயணத்தைத் தொடங்கிய வேகத்தில் கைது செய்கிறது. ஒரு உதயநிதிக்கே இந்த ஆட்சி பயந்து விட்டதா? கழகக் குடும்பங்கள் ஒவ்வொன்றிலும் உதயநிதி போன்றவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் ஆயிரமாயிரமாய், லட்சோப லட்சமாய், இலட்சியக் கொடியேந்தி களத்தில் அடுத்தடுத்து அணிதிரளும்போது என்ன செய்யப் போகிறீர்கள்?.

திமுகவின் வெற்றி மக்கள் மனதில் ஆழமாகப் பதிந்து உறுதி செய்யப்பட்டிருப்பதை, நம்மைவிட அதிகமாக ஆள்வோர்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள். அதனால் தான், நம் மீது அவதூறுகளைப் பரப்ப நினைக்கிறார்கள். திசை திருப்பும் வேலைகளை மேற்கொள்கிறார்கள். அந்த மாய வலைகளை அறுத்தெறிவோம். அரசு கஜானாவைச் சுரண்டிக் கொழுத்து, நான்காண்டுகள் ஆட்சி செய்த இரட்டையர்களைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு டெல்லி சாணக்கியர்கள், மேடையில் பேசும் போது, எதிர்க்கட்சிகள் மேல் ஊழல் குற்றச்சாட்டும்-வாரிசு அரசியல் விமர்சனமும் வைப்பது, கண்ணாடி முன் நின்று கரடிபொம்மையின் விலை கேட்ட நகைச்சுவை போல இருக்கிறது.

அவர்கள் எத்தனை செப்படி வித்தைகள் செய்தாலும் மக்கள் தெளிவாகவே இருக்கிறார்கள். நாட்டை நாசப்படுத்தி-தமிழகத்தை வஞ்சித்து வரும் சக்திகளுக்கு, 2019 நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் தமிழக மக்கள் எத்தகைய அடி கொடுத்தார்களோ, அதைவிட பலமான அடியை 2021-ல் சட்டப் பேரவைக்கான தேர்தலில் வழங்குவார்கள். தலைவர் கட்டிக்காத்த இயக்கத்தை ஆட்சியில் அமரவைத்து, அதனைக் கலைஞரின் ஓய்விடத்தில் காணிக்கையாக்கும் வரை, நமக்கு ஓய்வில்லை. மாநிலத்தில் ஆள்வோரும், அவர்களையும் அவர்களது ஊழல்களையும் தாங்கிப் பிடித்துக்கொண்டிருக்கும் மத்திய ஆட்சியாளர்களும், நமது வெற்றிப் பயணத்தைத் தடுக்க நினைக்கும் சூழ்ச்சிகளை முறியடித்து முன்னேறுவோம்.
இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

* திமுக முன்னணியினர் பிரசாரம் தயாநிதி மாறன் உள்பட மேலும் 5 பேர் சேர்ப்பு
திமுக முதன்மைச் செயலாளரால் அறிவிக்கப்பட்டுள்ள திமுக முன்னணியினர் 15 பேர் மட்டுமின்றி, உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினரும் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினருமான தயாநிதி மாறன், தேர்தல் பணிக்குழுச் செயலாளர் கம்பம் செல்வேந்திரன் எம்பி, சிறுபான்மை நல உரிமைப்பிரிவு செயலாளர் டாக்டர் மஸ்தான், விவசாய அணிச் செயலாளர் கரூர் சின்னசாமி, மகளிர் அணித் துணைத்தலைவர் பவானி ராஜேந்திரன் ஆகிய 5 பேரும் பிரசார பயணத்தில் இணைய  இருக்கிறார்கள் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

* தை திங்களில் மு.க.ஸ்டாலின் நேரடி பிரசாரம்
காணொலி வாயிலாக மக்களைச் சந்தித்து உரையாடி வருகிறேன். தைத் திங்கள் தமிழ்ப் புத்தாண்டு பிறக்கும் பொழுதில் நேரடியாகப் பரப்புரையை மேற்கொள்ளவிருக்கிறேன் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Tags : forces ,election ,country ,volunteers ,MK Stalin ,Tamil Nadu , MK Stalin's letter to volunteers:
× RELATED கோடை விடுமுறையை குறிவைத்து ரயில்...