அரசு பன்னோக்கு மருத்துவமனையின் 4வது மாடியில் இருந்து குதித்து கொரோனா நோயாளி தற்கொலை

சென்னை: சென்னை ஆலப்பாக்கத்தை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் சந்திரசேகருக்கு (54), காய்ச்சல் ஏற்பட்டதால் கொரோனா பரிசோதனை செய்தனர். கடந்த 11ம் தேதி பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா உறுதியானது. இதையடுத்து ஓமந்தூரார் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டார். தொடர் சிகிச்சை பெற்று வந்த சந்திரசேகர் நேற்று வார்டில் இருந்து திடீரென மாயமானார். இதுகுறித்து அவரது மனைவி லலிதா மருத்துவர்களிடம் தெரிவித்தார். அதன்படி மருத்துவமனை ஊழியர்கள் மாயமான சந்திரசேகரை தேடினர்.

அப்போது, கொரோனா நோயாளிகள் தனிமைப்படுத்தப்பட்ட கட்டிடத்தின் பின்புறம் உடல் முழுவதும் படுகாயங்களுடன் சந்திரசேகர் இறந்தது கிடந்தது தெரியவந்தது. தகவலறிந்து வந்த திருவல்லிக்கேணி போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், கடும் மூச்சு திணறால் சிரமப்பட்ட சந்திரசேகர், மருத்துவமனை கட்டிடத்தின் 4வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

அதை தொடர்ந்து போலீசார் தற்கொலை குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கொரோனா நோயாளிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

>