×

50 தொகுதிகளை கேட்ட அமித்ஷா, 34 கொடுத்த எடப்பாடி அதிமுக-பாஜ கூட்டணி தொகுதி பங்கீட்டில் இழுபறி: சென்னை வந்து மீண்டும் பேச திட்டம்

சென்னை: தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பாஜவுக்கு 50 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று அமித்ஷா வலியுறுத்தினார். ஆனால் 34 தொகுதி தான் கொடுக்க முடியும் என்று எடப்பாடி அதிரடியாக அறிவித்தார். இதனால் அதிமுக-பாஜ கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து மீண்டும் அமித்ஷா சென்னை வந்து தொகுதி பங்கீடு தொடர்பாக பேச திட்டமிட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. பாஜ மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா இரண்டு நாள் பயணமாக நேற்று முன்தினம் சென்னை வந்தார். அவர் கலைவாணர் அரங்கில் நடந்த அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார்.

அந்த கூட்டத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர், “நாடாளுமன்ற தேர்தலில் அமைக்கப்பட்ட அதிமுக- பாஜ கூட்டணி, வர உள்ள தமிழக சட்டப்பேரவை தேர்தலிலும் தொடரும்’’ என்று அறிவித்தனர். அதைத் தொடர்ந்து, ஓட்டலுக்குச் சென்ற அமித்ஷாவை, முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் ஓ.பி.எஸ். ஆகியோர் சந்தித்து பேசினர். சந்திப்புக்கு முன்பாக கூட்டணி சீட் பங்கீடு விவகாரம் தொடர்பாக அமித்ஷாவிடம் நான் பேசி கொள்கிறேன். என்னிடம் பல்வேறு திட்டங்கள் உள்ளன என்று எடப்பாடி, ஓபிஎஸ்சிடம் தெரிவித்தார். அதற்கு ஓ.பி.எஸ். சம்மதம் தெரிவித்தார்.

தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி அமித்ஷாவை சந்தித்து தமிழக சட்டப்பேரவை தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக பேசினார். அப்போது அமித்ஷா, அதிமுக 117 இடங்களில் போட்டியிடலாம், பாஜவுக்கு 117 இடங்கள் ஒதுக்க வேண்டும் என்று கூறினார். பாஜவுக்கு ஒதுக்கப்படும் 117 இடங்களில் கூட்டணியில் உள்ள தேமுதிக, பாமக, தமாகா உள்ளிட்ட கட்சிகளுக்கு பாஜவே சீட் கொடுக்கும். அவர்களுக்கு சீட் வழங்கும் விவகாரத்தை நாங்கள் பார்த்து கொள்கிறோம் என்றும் அமித்ஷா முதல் திட்டத்தை அப்போது தெரிவித்தார். இரண்டாம் திட்டமாக பாஜவுக்கு 50 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று கூறி பாஜ போட்டியிடும் என்று கண்டறியப்பட்டுள்ள 60 தொகுதிகளுக்கான பட்டியலை அமித்ஷா அளித்தார்.

இதற்கு எடப்பாடி சம்மதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. பாஜவுக்கு 30 இடங்கள் ஒதுக்கப்படும் என்று எடப்பாடி கூறினார். அதிகமான தொகுதிகளை வழங்கினால் பீகாரில் காங்கிரசுக்கு ஏற்பட்ட நிலை தான் தமிழகத்தில் பாஜகவுக்கு ஏற்படும்.
எனவே, அவ்வளவு சீட் தர முடியாது. மேலும் பாஜவுக்கு தமிழகத்தில் மக்களிடையே எந்த செல்வாக்கும் இல்லை. போட்டியிடவும் ஆட்கள் இல்லை. நாங்கள் கொடுக்கும் சீட்டை வாங்கி கொள்ளுங்கள். பாஜ போட்டியிடும் தொகுதிகளுக்கான செலவு அனைத்தையும் அதிமுக ஏற்றுக்கொள்ளும் என்றும் எடப்பாடி தெரிவித்ததாக கூறப்படுகிறது.

அப்போது தமிழக சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக பல்வேறு திட்டங்களை நாங்கள் வைத்துள்ளோம். எனவே, நாங்கள் கேட்கும் தொகுதிகளை வழங்க வேண்டும் என்று அமித்ஷா வலியுறுத்தினார். இதையடுத்து 34 சீட் வரை தர எடப்பாடி இறங்கி வந்தார். ஆனால், 50 இடங்களை பாஜவுக்கு கட்டாயம் ஒதுக்க வேண்டும் என்பதில் அமித்ஷா கறாராக இருந்தார். இதற்கு எடப்பாடி ஒத்துக்கொள்ளவில்லை. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமித்ஷா, ‘‘ஜனவரி மாதத்திற்குள் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அறிவிக்க வேண்டும். டிசம்பர் மாதத்திற்குள் யாருக்கு எவ்வளவு தொகுதிகள் என்பதை முடிவு செய்ய வேண்டும்” என்று கூறினார்.

இதற்கு, கட்சியின் நிர்வாகிகளிடம் ஆலோசித்து முடிவை அறிவிப்பதாக எடப்பாடி தெரிவித்தார். இதனால் எடப்பாடி-அமித்ஷா சந்திப்பில் தொகுதி பங்கீடு தொடர்பாக எந்தவித உடன்பாடும் ஏற்படவில்லை. சுமார் 45 நிமிடம் நடைபெற்ற சந்திப்பு இழுபறியுடன் முடிவடைந்தது. மீண்டும் தொகுதி பங்கீடு தொடர்பாக இரு கட்சிகளும் பேச திட்டமிட்டுள்ளது. இதற்காக மீண்டும் அமித்ஷா சென்னை வருவார் என்றும் கூறப்படுகிறது.இதன்பின்னர் நடைபெற்ற பாஜ நிர்வாகிகள் கூட்டத்தில் அமித்ஷா பேசுகையில்,” சட்டசபை தேர்தல் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையை டெல்லி மேலிடம் பார்த்துக் கொள்ளும். நீங்கள் தேர்தல் பணியை கவனியுங்கள். பூத் கமிட்டியை பலப்படுத்துங்கள். இப்போதே பூத் கமிட்டியை பலப்படுத்தினால் தான் அடுத்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் பாஜ ஆட்சியை கொண்டு வர முடியும்” என்று கூறியதாக கூறப்படுகிறது.

Tags : Amit Shah ,constituencies ,alliance ,BJP ,Edappadi AIADMK ,Chennai ,constituency , Amit Shah asks for 50 seats, Edappadi AIADMK-BJP alliance pulls 34
× RELATED ஜம்மு – காஷ்மீரில் செப்டம்பருக்குள்...