×

காலே கிளேடியேட்டர்ஸ் கேப்டனாக ஷாகித் அப்ரிடி

கொழும்பு: லங்கன் பிரிமியர் லீக் டி20 தொடரில் களமிறங்கும் காலே கிளேடியேட்டர்ஸ் அணியின் கேப்டனாக பாகிஸ்தான் நட்சத்திரம் ஷாகித் அப்ரிடி நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கையில் நடைபெற உள்ள லங்கன் பிரிமியர் லீக் (எல்பிஎல்) டி20 தொடரில் கொழும்பு கிங்ஸ், தம்புல்லா வைகிங், காலே கிளாடியேட்டர்ஸ், ஜாப்னா ஸ்டாலியன்ஸ், கண்டி டஸ்கர்ஸ் ஆகிய 5 அணிகள் களமிறங்குகின்றன. அம்பாந்தோட்டையில் (ஹம்பன்டோட்டா) வரும் 26ம் தேதி தொடங்கும் இந்த தொடர் டிசம்பர் 16ம் தேதி நிறைவடைகிறது. ஒவ்வொரு அணியும் மற்ற 4 அணிகளுடன் தலா 2 முறை லீக் சுற்றில் மோதும் நிலையில், புள்ளிப் பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும்.

கொழும்பு அணியின் கேப்டனாக இலங்கை ஆல் ரவுண்டர் ஏஞ்சலோ மேத்யூஸ் நியமிக்கப்பட்டுள்ளார். தம்புல்லா அணி ஆல் ரவுண்டர் தசுன் ஷனகா தலைமையில் களமிறங்குகிறது. ஜாப்னா அணிக்கு திசாரா பெரெரா கேப்டன் பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில், காலே கிளேடியேட்டர்ஸ் அணியின் கேப்டனாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணி முன்னாள் நட்சத்திரம் ஷாகித் அப்ரிடி (40 வயது) நியமிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் தொழிலதிபரும் குவெட்டா கிளேடியேட்டர்ஸ் அணி உரிமையாளருமான நதீம் ஓமர், காலே கிளேடியேட்டர்ஸ் அணியின் உரிமத்தையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக காலே அணியின் கேப்டனாக சர்பராஸ் அகமது அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் நியூசிலாந்து தொடருக்கு தேர்வு செய்யப்பட்டதை அடுத்து அப்ரிடிக்கு தலைமை பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த தொடரில் இருந்து கிறிஸ் கேல், லசித் மலிங்கா விலகியுள்ள நிலையில், தென் ஆப்ரிக்க வேகம் டேல் ஸ்டெயின் கண்டி டஸ்கர்ஸ் அணிக்காக களமிறங்குவதை உறுதி செய்துள்ளார். 26ம் தேதி இரவு 7.30க்கு தொடங்கும் முதல் லீக் ஆட்டத்தில் கொழும்பு கிங்ஸ் - கண்டி டஸ்கர்ஸ் மோதுகின்றன. போட்டிகள் அனைத்தும் அம்பாந்தோட்டை, மகிந்தா ராஜபக்ச சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடக்க உள்ளன. நேரடி ஒளிபரப்பு: சோனி.

Tags : Shakit Afridi ,Kale Gladiators , Shakit Afridi as captain of Kale Gladiators
× RELATED எப்படியாவது இந்திய அணி...