5 நட்சத்திர ஓட்டல் கலாசாரத்தை ஒழிக்கும் வரையில் நம்மால் தேர்தலில் வெற்றி பெற முடியாது; காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் பேட்டி

டெல்லி: மக்களுடனான தொடர்பை காங்கிரஸ் நிர்வாகிகள் இழந்துவிட்டதாகவும், பீஹார் மற்றும் இடைத்தேர்தல்களில் ஏற்பட்ட தோல்வியை கண்டு கவலை கொள்வதாக அக்கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது; பீஹார் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் தோல்வி குறித்து கவலைப்படுகிறோம். தோல்விக்கு தலைமையை குறைசொல்லவில்லை. மக்களுடனான தொடர்பை கட்சி நிர்வாகிகள் இழந்துவிட்டனர். கட்சி சார்பில் வாய்ப்பு அளிக்கப்படும் ஒருவர் முதலில் 5 நட்சத்திர ஓட்டலில் தான் தங்குகிறார். சாலை மோசமாக இருந்தால், அந்த வழியாக கூட செல்ல முடியாது.

5 நட்சத்திர கலாசாரத்தை ஒழிக்கும் வரையில், நம்மால் தேர்தலில் வெற்றி பெற முடியாது. கட்சி நிர்வாகிகள் முதலில் தங்களது பொறுப்புகளை உணர்ந்து கொள்ள வேண்டும். கட்சியில் பொறுப்பு கொடுக்கப்பட்ட உடன், அதனை உணர்ந்து செயல்பட வேண்டும். கடந்த 72 ஆண்டுகளில், தற்போது காங்கிரஸ் மிகவும் பின்னோக்கி ய நிலையில் உள்ளது. கடந்த இரண்டு முறை, லோக்சபாவில் எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட காங்கிரசால் பெற முடிய வில்லை. ஆனால், நாங்கள் எதிர்பார்க்காத வகையில் லடாக்கில் நடந்த கவுன்சில் தேர்தலில் 9 இடங்களில் வெற்றி பெற்றுள்ளோம். கட்சி நிர்வாகிகள் முதலில் தங்களது பொறுப்புகளை உணர்ந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு மட்டத்திலும், நமது செயல்படும் முறையை மாற்றாதவரை, கட்சியில் எந்த மாற்றமும் ஏற்படாது. கட்சி தொண்டர்களுக்கு வாய்ப்புகள் தரப்பட வேண்டும்.

கட்சியில் பதவிகளுக்கு தேர்தல் நடத்த வேண்டும். கொரோனா காலத்தில் சோனியா குடும்பத்தினர் எதுவும் செய்ய முடியாது. இதனால், அவர்களுக்கு நற்சான்றிதழ் அளிக்கலாம். எங்களது கோரிக்கையில் எந்த மாற்றமும் இல்லை. எங்களின் பெரும்பாலான கோரிக்கைகளை, தலைமை ஏற்று கொண்டது. தேசிய அளவில் மாற்றாக இருக்கவும், கட்சிக்கு புத்துயிர் அளிக்கவும் கட்சி பதவிகளுக்கு தேர்தல் நடத்த வேண்டும். கட்சியின் கொள்கை அடிப்படை முற்றிலும் சீர்குலைந்துவிட்டது. அதனை நாம் மறுசீரமைக்க வேண்டும். அதன்படி ,எந்த தலைவராவது தேர்வு செய்யப்பட்டால், அது வெற்றிகரமாக அமையும். தலைமையை மட்டும் மாற்றினால் மட்டும், பீஹார், உ.பி., ம.பி.,யில் வெற்றி பெறுவோம் என நம்பினால் தவறு. இவ்வாறு குலாம் நபி ஆசாத் கூறினார்.

Related Stories:

>