உளுந்தூர்பேட்டை அருகே பரபரப்பு; ஆதிகேசவப்பெருமாள் கோயிலில் கொள்ளை முயற்சி: பல லட்சம் மதிப்பிலான ஐம்பொன் சிலைகள் தப்பின

உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அருகே ஆதிகேசவப்பெருமாள் கோயிலில் கொள்ளை சம்பவம் தோல்வியில் முடிந்ததால் பல லட்சம் மதிப்பிலான ஐம்பொன் சிலைகள் தப்பின. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது பு.மாம்பாக்கம் கிராமம். இங்கு பழமையான ஆதிகேசவப்பெருமாள் கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோயிலை நேற்று மாலை இதே கிராமத்தை சேர்ந்த ரவி என்பவர் பூட்டிவிட்டு சென்றுள்ளார். இன்று காலை கோயிலை திறக்க வந்தபோது கோயிலின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் கோயிலின் கருவறைக்கு செல்லும் வழியில் உள்ள மற்றொரு கதவு இரும்பு ராடால் உடைக்க முயற்சி செய்துள்ளதும் தெரியவந்தது.

இதுகுறித்து அவர் உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்வநாயகம், ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் கைரேகைகளை பதிவு செய்தும், கோயில் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கோயில் கருவறை பகுதியில் பல லட்சம் மதிப்பிலான 3 கோயில்களின் ஐம்பொன் சிலைகள் உள்ளன. இதனை மர்ம நபர்கள் திருடுவதற்கு முயற்சி செய்துள்ளது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் உளுந்தூர்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories:

>