×

சென்னை புறநகர் ரயில்களில் பயணிக்க மாணவர்கள், வியாபாரிகளுக்கு அனுமதி...!! தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: சென்னை புறநகர் ரயில்களில் பயணிக்க மாணவர்களுக்கு அனுமதி அளிப்பதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது. விளையாட்டு வீரர்கள், நேர்முக தேர்வுக்கு செல்பவர்கள், வியாபாரிகளும் பயணிக்கலாம். நாளை முதல் இந்த அனுமதி அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் 23 ஆம் தேதி ஊரடங்கு அறிவிக்கப்பட்டதில் இருந்து, சென்னை புறநகர் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து அத்தியாவசிய பணிகளில் ஈடுபடும் மத்திய, மாநில அரசு ஊழியர்கள் மட்டும் புறநகர் மின்சார ரயிலில் பயணிக்க அண்மையில் அனுமதிக்கப்பட்டனர்.

அதன் பிறகு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் சுகாதாரம் மற்றும் துப்புரவு பணிகளில் ஈடுபடும் பணியாளர்கள், அத்தியாவசிய பொருள்களை கையாளும் மற்றும் சேவைகளில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள், கல்வி நிலையங்களில் பணியாற்றுபவர்கள் உள்ளிட்டோருக்கு புறநகர் ரயிலில் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டது. மேலும் தனியார் பாதுகாப்பு நிறுவன ஊழியர்கள், அச்சு ஊடகம் மற்றும் காட்சி ஊடகத்தில் பணி புரியும் ஊழியர்கள், சரக்கு மற்றும் பயணிகளுக்கான போக்குவரத்தில் ஈடுபடும் நிறுவனங்களில் பணியாற்றுபவர்களும் மின்சார ரயில்களில பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் வரும் 23 ஆம் தேதி முதல் பெண்களுக்கு புறநகர் ரயிலில் பயணிக்க அனுமதி வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் அறிவித்தார். இதனை தொடர்ந்து தற்போது ரெயில்வே துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி சென்னை புறநகர் ரெயில்களில் பயணிக்க மாணவர்கள், விளையாட்டு வீரர்கள், நேர்முக தேர்வுக்கு செல்பவர்கள், வியாபாரிகளுக்கும் அனுமதி வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அனுமதி நாளை முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பயணம் செய்பவர்கள் உரிய சான்றிதழ்களுடன் வர வேண்டும் எனவும் ரயில்வே துறை அறிவுறுத்தியுள்ளது.

Tags : traders ,Chennai , Students and traders allowed to travel on Chennai suburban trains ... !! Southern Railway Notice
× RELATED நீடாமங்கலத்தில் மேம்பாலப்பணியை...