ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் தொடர்; டொமினிக் தீம்-மெட்வெடேவ் பைனலில் இன்று மோதல்

லண்டன்: சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் முதல் 8 இடத்தில் உள்ள வீரர்கள் பங்கேற்ற ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. இதில் தலா 4 பேர் என இரு  பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் போட்டிகள் நடத்தப்பட்டன. லீக் போட்டிகளின் முடிவில் டோக்கியோ 1970 பிரிவில் முதல் 2 இடம் பிடித்த ரஷியாவின் டேனியல் மெட்வெடேவ், செர்பியாவின் ஜோகோவிச், லண்டன் 2020 பிரிவில், ஆஸ்திரியாவின் டொமினிக் தீம், ஸ்பெயியின் ரபேல் நடால் தகுதி பெற்றனர். நேற்று இரவு நடந்த முதல் அரையிறுதியில், நம்பர் ஒன் வீரரான ஜோகோவிச்- டொமினிக் தீம் மோதினர். விறுவிறுப்புடன் நடந்த இந்த போட்டியில் முதல் செட்டை 7-5 என டொமினிக் தீம் கைப்பற்றினார். 2வது செட்டில் கடுமையான போட்டி நிலவியது. டைப்ரேக்கர் வரை சென்ற இந்த செட்டை 7(12)-6(10) என போராடி ஜோகோவிச் தன்வசப்படுத்தினார்.

வெற்றியை தீர்மானிக்கும் கடைசி செட்டை 7-6 என டொமினிக் தீம் கைப்பற்றி இறுதி போட்டிக்குள் நுழைந்தார். டொமினிக் தீம் இந்த தொடரில் இதுவரை ஒரு போட்டியில் கூட தோற்காமல் பைனலுக்குள் நுழைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இன்று அதிகாலை நடந்த 2வது அரையிறுதியில் 2ம் நிலை வீரரான நடால்-டேனியல் மெட்வெடேவ் மோதினர். இதில் முதல் செட்டில் ஆதிக்கம் செலுத்திய நடால் 6-3 என கைப்பற்றினார். ஆனால் 2வது செட் டைப்ரேக்கர் வரை சென்ற நிலையில் 7-(7)-6(4) என மெட்வெடேவ் தன்வசப்படுத்தி பதிலடி கொடுத்தார். வெற்றியை முடிவு செய்யும் 3வது செட்டில் அதிரடியாக ஆடிய மெட்வெடேவ் 6-3 என எளிதாக கைப்பற்றி பைனலுக்குள் நுழைந்தார். இன்று இரவு 11.30 மணிக்கு நடைபெறும் பைனலில் மெட்வெடேவ்-டோமினிக் தீம் மோதுகின்றனர். இவர்கள் இருவரும் இதற்கு முன் நேருக்கு நேர் மோதிய 4 போட்டிகளில் டொமினிக் தீம் 3ல் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>