×

நடவடிக்கை எடுக்காத அரசு மண்டல புற்றுநோய் மையம் குமரியில் அமையுமா...: மண்டல புற்றுநோய் மையம் குமரியில் அமையுமா...

நாகர்கோவில்: குமரி மாவட்டம் புற்றுநோயாளிகள் அதிகம் வசிக்கின்ற மாவட்டமாக இருந்து வருகிறது. இயற்கையாகவே இங்குள்ள மண்ணில் உள்ள கதிரியக்க தன்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் இதற்கு கூறப்படுகிறது. புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றவர்களின் உயிர் இழப்புகளும் அதிகம் உள்ளது. மக்கள் பிரதிநிதிகள், சமய தலைவர்கள் முதல் சாதாரண மக்கள் வரை புற்றுநோயால் அதிகம் மரணமடைந்து வருகின்றனர். புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றவர்களுக்கு உரிய சிகிச்சை பெற வேண்டுமெனில் திருவனந்தபுரத்தில் உள்ள ரீஜினல் கேன்சர் சென்டர் (ஆர்சிசி) க்குத்தான் செல்ல வேண்டும் என்ற நிலை மாவட்ட மக்களிடம் இன்றளவில் உள்ளது. மாவட்டத்தில் புற்றுநோய் தாக்கம் அதிகம் இருப்பதை உணர்ந்து கடந்த திமுக ஆட்சி காலத்தில் நாகர்கோவிலில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் அப்போதைய முதல்வர் கருணாநிதி, ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்கப்படும் என்று அறிவித்தார். மேலும் தொடர்ந்து ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் இதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

ஆனால் அதன் பின்னர் ஆட்சி மாற்றம் காரணமாக திட்டம் அப்படியே கிடப்பில் போடப்பட்டது. இப்போதும் மக்கள் திருவனந்தபுரத்திற்கு புற்றுநோய் சிகிச்சைக்காக தேடி அலைய வேண்டிய நிலை தொடர்கிறது. கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட காலகட்டத்தில் குமரி மாவட்டத்தில் இருந்து நோயாளிகள் கேரளா மாநிலம் செல்வதற்கு அம்மாநில அரசு தடைவிதித்தது. மேலும் குமரி மாவட்டத்தை சேர்ந்த 560 புற்றுநோயாளிகள் திருவனந்தபுரத்தில் உள்ள மண்டல புற்றுநோய் மையத்தில் பதிவு செய்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா வேளையில் கடந்த ஏப்ரல் மாதம் 24ம் தேதி இது தொடர்பாக கருத்து தெரிவித்த கேரள முதல்வர் பினராய் விஜயன், ‘குமரி மாவட்டம் உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியிலிருந்து திருவனந்தபுரத்தில் உள்ள பிராந்திய புற்றுநோய் சிகிச்சை மையத்திற்கு தினமும் ஏராளமானோர் சிகிச்சைக்காக வருகின்றனர். குமரி மாவட்டத்திலிருந்து மட்டும் இந்த மருத்துவமனைக்கு தினமும் 560 பேர் சிகிச்சைக்காக வருகின்றனர்.

தற்போது ஊரடங்கு சட்டம் அமலில் இருப்பதால் இவர்களால் உரிய நேரத்திற்கு திருவனந்தபுரத்திற்கு வந்து சிகிச்சை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே எனவே தமிழகத்தில் உள்ள நோயாளிகளின் வசதிக்காக திருவனந்தபுரம் பிராந்திய புற்றுநோய் மருத்துவமனையின் ஏற்பாட்டில் குமரி மாவட்டத்தில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனையில் தமிழக அரசின் ஒத்துழைப்புடன் புற்றுநோய் சிகிச்சை மையம் தொடங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது’ என்று கூறியிருந்தார். ஆனால் தமிழக அரசோ, குமரி மாவட்ட நிர்வாகமோ இதனை கண்டுகொள்ளவில்லை. தூத்துக்குடியில் அரசு மருத்துவ கல்லூரியில் இந்த சிகிச்சை வசதி உள்ளது.

அங்கு பயன்படுத்திக்கொள்ளலாம் என்று கூறத்தொடங்கியது.குமரி மாவட்டத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட, பாதிக்கப்பட்டு வருகின்ற மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் திருவனந்தபுரத்தில் மட்டும் 560 பேர் வரை பதிவு செய்து சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதனை அந்த மாநில முதல்வரே தெரிவித்துவிட்ட நிலையிலும் தமிழக அரசு இதனை கண்டுகொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இவை ஒருபுறம் இருக்க குமரி மாவட்டத்தில் கொரோனா நோயின் தாக்கம் தொடர்பாக ஆய்வுக்கு வந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘ ‘இதுவரை ஆய்வில் அப்படியேதும் கிடைக்கப் பெறவில்லை. ஒவ்வொரு மாவட்டத்திலும் எவ்வளவு நோய் வந்திருக்கின்றது என்ற ஆய்வறிக்கையை அரசு பார்க்கும். அதன்படி இருந்தால் அரசு அதை ஆய்வு செய்யும்’ என்று கூறிவிட்டு சென்றார்.

குமரி மாவட்டத்தில் நிர்வாக பொறுப்பில் இருக்கின்ற ஒவ்வொரு கலெக்டர்களிடமும் இந்த கோரிக்கை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக முன்வைக்கப்படுகிறது. விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம், மீனவர் குறைதீர்க்கும் கூட்டம் போன்வற்றிலும் இது தொடர்பாக பிரச்னைகள் எழுப்பப்படுகிறது. ஆனால் கோரிக்கை இன்னமும் நிறைவேறவில்லை. மாவட்டத்தில் கொரோனாவுக்கு உயிர் பலியானவர்களில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் பலர் உண்டு. மண்டல சிகிச்சை மையத்திற்கு செல்ல முடியாமல், கொரோனாவின் பிடியில் சிக்கி அதன் தாக்கத்தை எதிர்கொள்ள முடியாமல் உயிரிழந்துள்ளனர்.

ரத்த புற்றுநோய், தைராய்டு புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய், வாய் புற்றுநோய், மார்பக புற்றுநோய், சிறுநீரக புற்றுநோய் என பல்வேறு வகையிலான புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மாவட்டத்தில் பலர் உயிரிழந்துள்ளனர். புற்று நோயால் பாதிக்கப்பட்ட பலரும் நோய் கண்டுபிடிக்கப்படாமல் சிகிச்சை பெற்றுவிட்டு நோய் முற்றியபிறகு கடைசியாக திருவனந்தபுரத்தில் உள்ள மண்டல புற்றுநோய் சிகிச்சை மையத்தில் சிகிச்சைக்கு செல்கின்றனர். பின்னர் அங்குள்ள மருத்துவர்களால் கைவிடப்படுகின்ற நிலையில் உயிரிழப்புகள் ஏற்படுகிறது. பல குடும்பங்கள் தங்களது வீடு, நிலங்களை சிகிச்சைக்காக விற்று வாழ வழியின்றி சிரமப்பட்டு வருகின்றனர்.

ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 20 ஆண்களும், 14 பெண்களும் தங்கி சிகிச்சை பெறும் வகையில் புற்றுநோய் சிகிச்சை பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் குமரி மாவட்டத்தில் உள்ள புற்று நோயாளிகள் எண்ணிக்கைக்கு இது போதுமானது அல்ல. திருவனந்தபுரத்தில் செயல்படுவதுபோன்று மண்டல புற்றுநோய் மையத்தின் ஒரு பிரிவை குமரி மாவட்டத்திலும் போதிய படுக்கை வசதிகளுடன் ஏற்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகும்.

Tags : Kumari ,Government Regional Cancer Center ,Regional Cancer Center , Action, Government Zone, Cancer Center, Kumari
× RELATED கன்னிப்பூ சாகுபடிக்கு ஆயத்தம்...