மாவட்ட தலைநகரானாலும் தத்தளிக்கும் கிருஷ்ணகிரி

* அடிப்படை வசதிகள் கேள்விக்குறி?

* வளர்ச்சிக்கு போடுது முட்டுக்கட்டை

கிருஷ்ணகிரி: மாங்கனிக்கு பெயர் போன மாவட்டமாக கிருஷ்ணகிரி விளங்குகிறது. கிரானைட், விவசாயம், தொழிற்சாலைகள், பழ உற்பத்தி, பூக்கள் உற்பத்தி என பலவற்றிற்கும் இந்த மாவட்டம் பிரசித்தி பெற்றது. ஒருங்கிணைந்த தர்மபுரி மாவட்டத்தில் இருந்த கிருஷ்ணகிரியை தனி மாவட்டமாக பிரிக்க வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்த நிலையில் கடந்த 2004ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கிருஷ்ணகிரி மாவட்டம் உதயமானது. இதைத் தொடர்ந்து 2006ல் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இந்த மாவட்டத்தின் தலைநகரான கிருஷ்ணகிரியில் கலெக்டர் அலுவலகம், மாவட்ட போலீஸ் அலுவலகம், நகரின் மையப்பகுதியில் புதியதாக அனைத்து வசதிகளுடன் கூடிய பஸ் நிலையம் ஆகியவை காட்டப்பட்டன.

இதன் பின்னர் கடந்த 10 ஆண்டுகளாக எந்த வித வளர்ச்சியும் இல்லாமல் அடிப்படை வசதிகள் கூட கேள்விக்குறியாகி உள்ளது. குறிப்பாக கிருஷ்ணகிரி மாவட்ட தலைநகரம் என்று கூற கூடிய அளவிற்கு முக்கிய அடிப்படை வசதிகள் கூட இல்லாதது வேதனையான ஒன்று.மாவட்டத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள் ஒன்று, இரண்டல்ல ஏராளம். 33 வார்டுகளை கொண்ட கிருஷ்ணகிரி நகராட்சியில் மக்கள் தொகை, நகரின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதை சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என்பது பலரது கோரிக்கையாகும். காரணம் சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்ந்தால் கூடுதல் நிதி வருவாய் கிடைக்கும். இதன் மூலம் மேலும் பல திட்டங்களை இங்கு நிறைவேற்ற முடியும். எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா தமிழ்நாடு முழுவதும் அதிமுக அரசால் நடத்தப்பட்டது. அதன்படி கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23ம் தேதி கிருஷ்ணகிரியில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடந்தது. அந்த விழாவில் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கிருஷ்ணகிரி நகராட்சிக்கு அருகில் உள்ள வெங்கடாபுரம், அகசிப்பள்ளி, தேவசமுத்திரம், காட்டிநாயனப்பள்ளி, கட்டிகானப்பள்ளி, பெத்தனப்பள்ளி, கள்ளகுறிக்கி மற்றும் பையனப்பள்ளி ஆகிய 8 ஊராட்சிகளை இணைத்து கிருஷ்ணகிரி சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என அறிவித்தார்.

இந்த அறிவிப்பு வெளி வந்து, 3 ஆண்டுகள் கடந்து விட்டன. அறிவிப்பு வெறும் பெயர் அளவு மட்டுமே இருந்ததே தவிர, கிருஷ்ணகிரி நகராட்சி தரம் உயர்த்தப்படவில்லை. கடந்த டிசம்பர் மாதம் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்தது. நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சி நீங்கலாக ஏனைய ஊராட்சி, ஒன்றியங்களுக்கு இந்த தேர்தல் நடந்தது. அந்த தேர்தலில் மேற்கண்ட ஊராட்சிகளுக்கு தேர்தல் நடந்து, தலைவர், உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதன் மூலம் கிருஷ்ணகிரி சிறப்பு நிலை நகராட்சி என்பது கனவாகி போனது.

பெங்களூரில் இருந்து ஓசூர் வழியாக தினமும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரசு விரைவு பஸ்கள் செல்கிறது.

அதே போல பல்வேறு மாவட்டங்களில் இருந்து கிருஷ்ணகிரி வழியாக ஓசூர், பெங்களூருக்கு அரசு விரைவு பஸ்கள் செல்கின்றன. இந்த பஸ்களுக்கு ஓசூரில் முன்பதிவு இருக்கும் நிலையில், மாவட்ட தலைநகரமான கிருஷ்ணகிரியில் முன்பதிவு கிடையாது. பயணிகள் இல்லாவிட்டால் மட்டுமே கிருஷ்ணகிரி பஸ் நிலையத்திற்குள் அரசு விரைவு பஸ்கள் வருகின்றன. இல்லாவிட்டால் பை-பாஸ் சாலையில் சென்று விடுகின்றன. அவசர வேலையாக கிருஷ்ணகிரி பயணிகள் அரசு விரைவு பஸ்களில் ஏற சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் உள்ள சுங்க சாவடியில் காத்திருக்க வேண்டும்.

தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் புளோரைடு கலந்த நீரை குடிப்பதால் எலும்பு, பல் சம்பந்தப்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டு வந்தனர். இதனால் கடந்த 2006ம் ஆண்டு திமுக ஆட்சி காலத்தில் ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக அன்றைய துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், ஜப்பான் நாட்டு நிதி உதவியுடன் இந்த திட்டத்தை கொண்டு வர நடவடிக்கை எடுத்தார். 90 சதவீத பணிகள் நிறைவு பெற்ற நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, அதிமுக பொறுப்பேற்றது. கடந்த 2011ல் அவசர கதியாக இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. கிருஷ்ணகிரி நகர் உள்பட சுற்று வட்டாரத்தில் பல இடங்களுக்கு ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் இன்னும் முழுமையாக கிடைக்கவில்லை.

இதைத் தவிர கிருஷ்ணகிரி நகரில் முழுமையாக பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தாதது, நகரில் பல இடங்களில் சாலைகள் சீரமைக்கப்படாதது, கழிவுநீர் கால்வாய்கள் கட்டப்படாதது, பல்வேறு துறை சார்ந்த அரசு அலுவலகங்கள் இன்னும் கிருஷ்ணகிரியில் அமைக்கப்படாதது, விபத்துக்கள் நடைபெறும் தேசிய நெடுஞ்சாலையில் உயர் மட்ட மேம்பாலங்கள் கொண்டு வரப்படாதது என்று கிருஷ்ணகிரி நகரில் அடிப்படை பிரச்சினைகள் ஏராளமாக உள்ளன. அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படாததால் மக்கள் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறார்கள். மக்களின் தேவைகளான இந்த அடிப்படை வசதிகளை நிறைவேற்றிட வேண்டும் என்பதே கிருஷ்ணகிரி நகர மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Related Stories:

>