ஆர்.எஸ்.மங்கலம் அருகே போக்குவரத்து வசதியின்றி 12 கிராம மக்கள் பரிதவிப்பு

* 10 கிமீ தூரம் வரை நடந்தே செல்லும் கொடுமை

* ஆயிரக்கணக்கான குடும்பங்கள் அன்றாடம் அவதி

ஆர்எஸ் மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள சுமார் 12க்கும் மேற்பட்ட கிராமங்களில் பஸ் போக்குவரத்து வசதியின்றி, அன்றாடம் மக்கள் பரிதவித்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தின் ‘நெற்களஞ்சியம்’ என அழைக்கப்படும் பெருமைக்குரியதாக ஆர்.எஸ்.மங்கலம் பகுதியுடன் ஒருங்கிணைந்த திருவாடானை தாலுகா பகுதி இருக்கிறது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பாக தனி தாலுகாவாக ஆர்.எஸ்.மங்கலம் பிரிக்கப்பட்டது. இப்பகுதியின் ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய் தமிழகத்தின் இரண்டாவது பெரிய கண்மாய் என்ற பெருமை கொண்டிருக்கிறது. இப்பகுதி மக்கள் முழுக்க முழுக்க விவசாயத்தை நம்பியே உள்ளனர். இப்பகுதி விவசாயிகள் நெல், மிளகாய், பருத்தி போன்றவற்றை பயிரிடுகின்றனர். இப்பகுதியில் விளையக்கூடிய மிளகாய் வத்தலை விற்பனை செய்வதற்காக வாரம்தோறும் சனிக்கிழமைகளில் சந்தை நடைபெறுகிறது.

இச்சந்தைக்கு மதுரை, திருச்சி, தஞ்சாவூர், பட்டுக்கோட்டை , விருதுநகர், அருப்புக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மொத்த வியாபாரிகள் வந்து வாங்கிச் செல்கின்றனர். பெருமை வாய்ந்த ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய் மூலமாக பாசன வசதி பெறும் கிராமங்களான ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் உள்ள அன்னைநகர், சொக்கன்பச்சேரி, ராமநாதமடை, வில்லடிவாகை, இரட்டையூரணி ஆதிமுத்தன் குடியிருப்பு, சவேரியார்பட்டினம், புல்லமடை வீரிப்பச்சேரி, மணியம்பச்சேரி, வல்லமடை, கீழமடை - மேலமடை மற்றும் அப்பகுதியில் உள்ள சில கிராமங்கள் சுதந்திரம் அடைந்து சுமார் முக்கால் நூற்றாண்டுகள் நிறைவடைய உள்ள நிலையிலும், இன்று வரை பஸ் வசதி இல்லாத அவல நிலையில் இருக்கிறது. இப்பகுதியின் 12க்கும் அதிக கிராமங்களில் இந்த அவலநிலை தொடர்கிறது.

இக்கிராமங்களின் மக்கள் விவசாயத்திற்கு தேவையான இடு பொருட்களான உரம், பூச்சி மருந்து, களைக் கொல்லி உள்ளிட்டவை வாங்கவோ அல்லது விளை நிலங்களில் விளைந்த நெல், மிளகாய், பருத்தி உள்ளிட்டவற்றை விற்பனைக்கு கொண்டு செல்லவோ இப்பகுதியில் உள்ள மக்களுக்கு ஏதாவது அவசரத் தேவைக்கு கூட சுமார் 10 கி.மீ தூரத்தில் உள்ள ஆர்.எஸ்.மங்கலம் தான் செல்ல வேண்டும். இதே போல் சவேரியார்பட்டிணத்தில் உள்ள புனித சேவியர் உயர்நிலைப்பள்ளி உள்பட முக்கிய பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் ஆவரேந்தல், நெடும் புலிக்கோட்டை, செட்டியமடை உள்ளிட்ட தொலைதூர கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர். குறிப்பாக வல்லமடை, கீழமடை- மேலமடை உள்ளிட்ட கடைக்கோடி கிராமங்களில் இருந்து பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், விவசாயிகள், அவசரத்திற்கு மருத்துவமனை செல்வோர் பஸ் ஏறுவதற்காக சுமார் 7 கி.மீ தொலைவில் உள்ள ஆர்.எஸ்.மங்கலம் பஸ் ஸ்டாண்ட், அல்லது 6 கிமீ தூரம் உள்ள தேசிய நெடுஞ்சாலை சவேரியார்பட்டிணம் விலக்கு உள்ளிட்ட பகுதிக்கு வர வேண்டும்.

தேர்தல் நேரத்தில் ஆளும் அதிமுகவினரால் வாக்குறுதிகள் வழங்கப்பட்டும், அரசு இதுவரை கண்டுகொள்ளாத நிலை தொடர்வதாக கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும், கீழமடை - மேலமடையில் இருந்து கோட்டை கரை ஆற்றின் குருக்கே கட்டப்பட்டுள்ள பாலம் வரை மண் சாலை மிகவும் மோசமாக சேறும், சகதியுமாக இருக்கிறது. இதனை சீரமைத்து, இவ்வழியாக போக்குவரத்து துவக்கலாம். இது இப்பகுதி பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும். ஆர்.எஸ்.மங்கலத்தில் இருந்து அன்னைநகர், சவேரியார் பட்டிணம், புல்லமடை, வல்லமடை, கொக்கூரணி வழியாக ஆனந்தூருக்கு இந்த வழித்தடத்தில் பஸ் இயக்கினால், இப்பகுதியில் உள்ள சுமார் 15 க்கும் மேற்பட்ட கிராமத்தினர் பயனடைய முடியும்.

பொதுமக்களின் நலன் கருதி மேற்கண்ட வழித்தடங்கள் வழியாக பஸ் இயக்க அரசும், மாவட்ட நிர்வாகமும் முன் வருவது அவசியம். இதேபோல், பஸ் வசதியே இல்லாமல் உரிய கல்வி, மருத்துவம் போன்ற ஒவ்வொரு விஷயத்திற்கும் அன்றாடம் போராடி வரும் இப்பகுதி கிராமங்களை கணக்கெடுத்து, இந்த கிராமங்களுக்கென சாலைகள் இருக்கும் நிலையிலும் பஸ் வசதிகளை ஏற்படுத்துவது அவசியம். அத்தோடு சிறு சிறு இடங்களில் அதிகபட்சம் ஒரு கிமீட்டருக்குள்ளான சேதமடைந்து கிடக்கும் வழிப்பகுதிகளை சீரமைத்து, பஸ்களை இயக்க அரசு முன் வர வேண்டும்.

Related Stories:

>