கனமழையால் சாலையில் அரிப்பு குளத்தூர்- குறுக்குச்சாலை இடையே 4 நாட்களாக போக்குவரத்து துண்டிப்பு: 12 கிராம மக்கள் அவதி

குளத்தூர்: கனமழையால் சாலை அரிக்கப்பட்டு குளத்தூர்- குறுக்குச்சாலை இடையே 4 நாட்களாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டு உள்ளது. இதனால் 12 கிராம மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் குளத்தூரில் இருந்து வேடநத்தம் வழியாக குறுக்குச்சாலை செல்லும் நெடுஞ்சாலையில், வேடநத்தம் அருகே காட்டாறு ஓடையில் இரு தரைமட்ட பாலங்கள் உள்ளன. கடந்த மாதம் இந்த தரைமட்ட பாலங்களை இடித்து அகற்றி உயர்மட்ட பாலங்கள் அமைக்க பணிகள் துவங்கியது. இதையடுத்து வாகனங்கள் இப்பகுதியை கடந்து செல்வதற்கு வசதியாக தற்காலிகமாக சரள் மண் கொண்டு சர்வீஸ் சா லை அமைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் குளத்தூர் பகுதியில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் தற்காலிக சாலைகள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு துண்டிக்கப்பட்டது. இதனால் முத்துக்குமாரபுரம், வள்ளிநாயகபுரம், கொல்லம்பரும்பு, வெங்கடேசபுரம், சண்முகபுரம், முள்ளூர், வேடநத்தம், துரைசாமிபுரம், சக்கம்மாள்புரம் உள்பட 12 கிராம மக்கள் வெளியூர் பயணங்கள் மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டு தவிப்புக்குள்ளாகி உள்ளனர். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், ‘வேடநத்தம் பகுதியில் உள்ள இந்த 2 தரைமட்ட பாலங்கள், மழை காலத்தில் தண்ணீரில் மூழ்கி போக்குவரத்து தடைபட்டு வந்தது.

மேலும் பாலமும் சிதிலமடைந்து காணப்பட்டது. இதையடுத்து பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கை ஏற்று தமிழக அரசு சார்பில் தரைமட்ட பாலங்களை அகற்றி உயர்மட்ட பாலங்கள் அமைக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது வெள்ளப்பெருக்கால் சர்வீஸ் சாலை முழுவதும் அரிக்கப்பட்டு துண்டிக்கப்பட்டதால் போக்குவரத்து தடைபட்டு உள்ளது. எனவே துண்டிக்கப்பட்ட இச்சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், என்றனர்.

Related Stories:

>