திண்டிவனம்-நகரி திண்டிவனம் - திருவண்ணாமலை மத்திய அரசின் நிதி ஒதுக்கீட்டிற்காக காத்திருக்கும் புதிய ரயில் பாதை திட்டம்

திருவண்ணாமலை : 14 ஆண்டுகளாகியும் முழுமையடையாத திண்டிவனம்- திருவண்ணாமலை, நகரி புதிய ரயில்பாதை திட்டம் முடங்கியுள்ளது. மக்களின் பயன்பாட்டுக்கு எப்போது வரும் என்ற கேள்வி எழுந்துள்ளது. நினைத்தாலே முக்தித்தரும் ஆன்மிக நகரான திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் புகழ்மிக்கது. தமிழகம் மட்டுமின்றி, வெளி மாநில, வெளி நாடுகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள், கிரிவலம் சென்று வழிபடுகின்றனர். பிரசித்தி பெற்ற ஆன்மிக நகருக்கு போக்குவரத்து கட்டமைப்பு வசதியும் இன்னும் மேம்படவில்லை. குறிப்பாக, ரயில் போக்குவரத்து வசதி மிகவும் குறைவு. விழுப்புரம்- காட்பாடி இடையே அகல ரயில்பாதையில், இரண்டு பாசஞ்சர் ரயில்களும், ஒருசில வாராந்திர ரயில்களும் மட்டுமே திருவண்ணாமலை வழியாக இயக்கப்படுகிறது.

திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு நேரடி ரயில் வசதி இன்னும் கானல் நீராகவே நீடிக்கிறது. அதேபோல், இங்கிருந்து தென் மாவட்டங்களுக்கும் நேரடி ரயில் வசதியில்லை. இந்நிலையில், திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர், திருவள்ளூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் ரயில்சேவையை மேம்படுத்தும் நோக்கத்தில், திண்டிவனம்- திருவண்ணாமலை மற்றும் திண்டிவனம்- நகரி ஆகிய 2 புதிய ரயில்பாதை திட்டங்கள் கடந்த 2006ம் ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. பின்னர், இரு திட்டங்களுக்கான முதற்கட்ட ஆய்வுப்பணிகள் முடிந்து, திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் பெற்று, திண்டிவனம்- திருவண்ணாமலை திட்டத்துக்கு ₹227 கோடி, திண்டிவனம்- நகரி திட்டத்துக்கு ₹450 கோடி நிதி ஒதுக்கீடு அனுமதி பெறப்பட்டது. அதைத்ெதாடர்ந்து, கடந்த 2008ம் ஆண்டு புதிய ரயில்பாதைகள் அமைக்கும் பணிகள் தொடங்கியது.

திண்டிவனம்-திருவண்ணாமலை இடையே 71.33 கி.மீ தொலைவிலான புதிய அகல ரயில்பாதை திட்டமிடப்பட்டுள்ளன. அதில், சோமாசிபாடி, கீழ்பென்னாத்தூர், பாலப்பாடி, ஆலம்பூண்டி, செஞ்சி, நாட்டார்மங்கலம், தீரனூர், குடிசைபாளையம் ஆகிய 8 புதிய ரயில் நிலையங்களும், 5 இடங்களில் ரயில் கிராசிங், 8 பெரிய பாலங்கள், 68 சிறிய பாலங்கள் அமைகின்றன.

அதேபோல், திண்டிவனம்- நகரி இடையே 170கிமீ தொலைவிலான புதிய அகல ரயில்பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளன. அதில், வந்தவாசி, செய்யாறு, ஆரணி, ராணிப்பேட்டை, வாலாஜாரோடு, கோடிக்கல், பள்ளிப்பட்டு, பொதட்டூர்பேட்டை உள்ளிட்ட 18 இடங்களில் புதிய ரயில்வே ஸ்ேடஷன்கள், 26 பெரிய பாலங்கள், 200 சிறிய பாலங்கள் அமைகின்றன.

இந்த இரண்டு திட்டங்களும் முழுமையாக நிறைவேறினால், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், திருவள்ளூர் மற்றும் ஆந்திர மாநிலத்தில் சித்தூர் ஆகிய மாவட்டங்கள் நேரடியாக பயன்பெறும்.

மேலும், திருவண்ணாமலையில் இருந்து திண்டிவனம் வழியாக சென்னைக்கு நேரடி ரயில்சேவை வசதி கிடைக்கும். திருவண்ணாமலையில் இருந்து காட்பாடி மற்றும் விழுப்புரம் வழியாக சென்னை செல்லும் பயண நேரம் மற்றும் தூரம் இதனால் குறையும். ஆனாலும், இந்த 2 புதிய ரயில்பாதை திட்டங்களையும் நிறைவேற்றுவதில் ரயில்வே துறை அக்கறை காட்டவில்லை என்று பொதுமக்களின் குற்றச்சாட்டாக உள்ளது. குறிப்பாக, ஏற்கனவே பணிகள் ெதாடங்கி, பல ேகாடி ரூபாய் செலவிடப்பட்ட திண்டிவனம்- திருவண்ணாமலை மற்றும் திண்டிவனம்- நகரி புதிய ரயில் பாதை திட்டங்கள் நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருப்பது தமிழகத்தை திட்டமிட்டு புறக்கணிப்பதாகவே கருதப்படுகிறது.இத்த புதிய ரயில் பாதை திட்டங்கள், 2020ம் ஆண்டுக்குள் முடிந்து பயன்பாட்டுக்கு வரும் என ரயில்வே துறை அறிவித்திருந்தது. ஆனால், 2020ம் ஆண்டு முடியப்போகிறது. ஆனால், இதுவரை இரு திட்டங்களிலும் 25 சதவீத பணிகள்கூட முழுமையாக நிறைவேறவில்லை.

இன்னும் பல இடங்களில் நிலம் கையகப்படுத்தும் பணிகூட முழுமையாக நடைெபறவில்லை. இத்திட்டத்தை செயல்படுத்துவதில் ஏற்படும் தாமதத்தால், ஒவ்வொரு ஆண்டும் திட்ட மதிப்பீடு கணிசமாக உயர்ந்து வருகிறது. அதனால், மக்கள் வரிப்பணம் வீணாகிறது. திண்டிவனம்- திருவண்ணாமலை மற்றும் திண்டிவனம்- நகரி இடையே புதிய ரயில்பாதைக்காக அமைக்கப்பட்ட பாலங்கள் பாழடைந்து காணப்படுகிறது. வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் அரைகுறையாக கட்டி முடித்த ரயில் நிலைய கட்டிடங்கள் பராமரிப்பு இல்லாமல் சீரழிந்துவிட்டன. திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர், செஞ்சி உள்ளிட்ட இடங்களில் ரயில்வே மேம்பாலங்கள் கட்டி முடிக்காமல், முழுமையின்றி முடங்கியிருக்கிறது.

ஒப்பந்ததாரர்களும், இத்திட்டத்தை கைவிட்டு சென்றுவிட்டனர். எனவே, கடந்த 2006ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட இத்திட்டங்கள், சுமார் 14 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது வேதனைக்குரியதாகும். இந்நிலையில் சமீபத்தில் ராணிப்பேட்டை வந்த சென்னை கோட்ட ரயில்வே மேலாளர் மகேஷிடம் இதுகுறித்து கேட்டபோது அவர் கூறுகையில், ‘இந்த திட்டத்தை முடிக்கும் வகையில் மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்ததும் பணிகள் மீண்டும் தொடங்கப்படும்’ என்றார். ஆனால் மத்திய அரசு எப்போது நிதி ஒதுக்கீடு செய்யும் என்பது கேள்விக்குறியாக உள்ளது. எனவே, புதிய ரயில்வே திட்டங்களை நிறைவேற்றி, ரயில் பாதைகளை பயன்பாட்டுக்கு கொண்டுவர ரயில்வே துறை தனிகவனம் செலுத்த வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Related Stories:

>