×

வெட்டூர்ணிமடம் கிறிஸ்துநகர் கிறிஸ்து அரசர் ஆலய 10ம் நாள் திருவிழா: சிறப்பு திருப்பலிகள் நடக்கின்றன

நாகர்கோவில்: நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் கிறிஸ்து அரசர் ஆலயத்தின் 10ம் திருவிழா இன்று நடக்கிறது. இதையொட்டி சிறப்பு திருப்பலிகளும் நடைபெறுகின்றன. நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் கிறிஸ்துநகரில் உள்ள, கிறிஸ்து அரசர் ஆலயத்தில் ஆண்டு தோறும் 10 நாள் திருவிழா விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தற்போது கொரோனா ஊரடங்கு உள்ளதால், கட்டுப்பாடுகளுடன் விழா நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. தினமும் செபமாலை மற்றும் பிரார்த்தனை திருப்பலிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த 15ம் தேதி 3ம் திருவிழா அன்று காலையில் முதல் திருவிருந்து திருப்பலி நடைபெற்றது.

9ம் திருவிழாவான நேற்று (21ம்தேதி) மாலை செபமாலை , பிரார்த்தனை, சிறப்பு மாலை ஆராதனை ஆகியவை நடைபெற்றன. தேவசகாயம் மவுண்ட் வட்டார முதன்மை அருட்பணியாளர் பெர்பெச்சுவல் ஆன்றனி பங்கேற்று தலைமை மற்றும் மறையுரை நிகழ்த்தினார்.  சிறப்பு நிகழ்ச்சியாக கிறிஸ்து அரசர் தேர் பவனியும் நடைபெற்றது. இன்று (22ம்தேதி) 10ம் திருவிழா நடக்கிறது. காலை 7.30க்கு கிறிஸ்து அரசர் பெருவிழா திருப்பலி நடைபெறுகிறது. மறை மாவட்ட முதன்மை அருட்பணியாளர் கில்லாரியுஸ் தலைமை மற்றும் மறையுரை நிகழ்த்துகிறார். பங்கிலிருந்து திருமணமாகி வெளியூர் சென்றவர்கள் மற்றும் பங்கு மக்கள் பங்கேற்கிறார்கள். மாலை 5.30க்கு நன்றி திருப்பலி மற்றும் திருக்கொடியிறக்க நிகழ்வு நடக்கிறது. இதில் மறவன்குடியிருப்பு பங்கு அருட்பணியாளர் ஜோசப் அருள் ஸ்டாலின் தலைமை மற்றும் மறையுரை நிகழ்த்துகிறார். இரவு 8.30க்கு கலைக்குழு மற்றும் இளைஞர் இயக்கம் சார்பில் ஆன்லைனில் கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

பங்கு தந்தை வின்சென்ட் பி. வில்சன், துணை பங்கு தந்தை மைக்கேல் நியூமென், பங்கு அருட்பணி பேரவை, பங்கு அருட்பணியாளர்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.   குழந்தைகள், முதியோர், நோயாளிகள் ஆலயத்துக்கு வருவதை தவிர்க்க வேண்டும். அனைவரும் கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும். கைகளை சுத்தம் செய்தல், சமூக இடைவெளி கடைபிடித்தல் போன்ற ஒழுங்குகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும். சுகாதார குழுவினர், தன்னார்வ தொண்டர்களின் வழிகாட்டுதலுக்கு அனைவருக்கும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றும் நிர்வாகிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags : Vettoornimadam Christian City Christ King Temple 10th Day Festival , Vettoornimadam, Christ Nagar, Christ the King, 10th day, festival
× RELATED தமிழ்நாட்டில் அதிகபட்சமாக ஈரோட்டில் இன்று 108 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில்!