×

கொள்ளிடம் அருகே கூழையார் கடற்கரையில் நேர்கல் சுவர் அமைப்பதால் அபாயம்: மீனவர்கள் அச்சம்: அரசு கண்டுகொள்ளுமா?

கொள்ளிடம்: நாகை மாவட்டம் சீர்காழி வட்டம் கூழையார் மீனவ கிராமத்தில் கடற்கரையில் கல்சுவர் அமைக்க தமிழக அரசு முடிவு எடுத்ததோடு சுமார் ₹ 7 கோடி மதிப்பிலான வேலைகளுக்கு டென்டரும் விடப்பட்டுள்து. இதனால் தொடுவாய், கூழையார், சின்ன கொட்டாயமேடு, கொட்டாய்மேடு, மடவாமேடு போன்ற மணற்பரப்பு கடற்கரை பகுதிகளில் கடல் அரிப்பு ஏற்படுவதோடு தங்கள் வாழ்விடத்தை இழக்க நேரிடுமோ என்ற அச்சம் அப்பகுதி மீனவர்களிடையே ஏற்பட்டுள்ளது. வேட்டங்குடி ஊராட்சி, கூழையார் மீனவக் கிராமத்தில் சுமார் 500 க்கும் மேற்பட்ட மீனவக் குடும்பங்கள் வசித்து வருகின்றனா். இவா்களில், பெரும்பாலானோருக்கு மீன்பிடித் தொழிலே வாழ்வாதாரமாகும். இப்பகுதியைச் சோ்ந்த மீனவா–்கள் சுமார் 100 க்கும் மேற்பட்ட பைபா் படகு மற்றும் கட்டுமரங்கள் மூலம் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனா்.

அதேவேளை, தொடுவாய், சின்னக்கொட்டாய்மேடு, கொட்டாய்மேடு, மடவாமேடு போன்ற பகுதிகளில் சுமார் 2000க்கும் மேற்பட்டோர் தங்களது படகு மூலம் மணற் பாங்கான கடற்கரையில் தொழில் செய்து வருகின்றனர். தற்பொழுது இந்த இயற்கையான மணற்பரப்பு கடற்கரை மீனவர்களுக்கு பேருதவியாக இருக்கின்றது. தற்பொழுது தமிழக அரசு, மீன் வளத்துறை மூலம் கூழையார் மீனவ கிராமத்தில் நேர்கல் சுவர் அமைக்க முடிவு செய்துள்ளதால் மீனவர்களுக்கு உயிருக்கும், படகுகளுக்கும் ஆபத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும் என மீனவர்கள் அஞ்சுகின்றனர். அண்மையில் திருமுல்லைவாசல் மீன்பிடித் துறைமுகத்திற்கு சரியான முறையில் தூண்டில் வளைவு அமைக்காத காரணத்தினால் சுமார் 5 ஏக்கருக்கும் மேலான, கடற்கரைக்கு பாதுகாப்பு அரணாக இருந்த 100க்கும் மேற்பட்ட வலிமையான சவுக்கு மரங்கள் கடல் அரிப்பினால் கடலில் அடித்துச் செல்லப்பட்டது. இதுகுறித்து கூழையார் கிராமத்தை சேர்ந்த சமூக ஆர்வலரும், திமுக ஒன்றியக் கவுன்சிலருமான அங்குதன் கூறுகையில் கூழையார் கடற்கரை அழகான மணற்பாங்கான பகுதியாகும்.

சுனாமி ஏற்பட்ட போது கூட, இங்குள்ள மணல் மேடுகளும், வனத் துறைக்கு சொந்தமான சவுக்கை மரங்களும் கடற்கரை கிராமங்களுக்கு பாதுகாப்பாக இருந்தது. இங்குள்ள மணற்பாங்கான கடற்கரை மீன்பிடிக்கச் சென்று திரும்பும் மீனவர்களுக்கு தாய்மடிக்கு சமமானது. பாதுகாப்பாகவும் இருந்து வருகிறது. இக்கிராமத்தில் கல்சுவர் அமைப்பதால் மணற்பாங்கான கடலோர கிராமங்களுக்கு பாதிப்பு ஏற்படும். அதேவேளை, கூழையார் மற்றும் சின்னக் கொட்டாய்மேடு கிராமங்களுக்கு இடையே செல்லும் பழமையான முடவனாற்றில் முறையான தூண்டில் வளைவு அமைத்து மீன் பிடிக்க வழிவகை செய்து கொடுத்தால் பயனுள்ளதாக இருக்கும். இயற்கையை நாம் சிதைத்தால், இயற்கை நமது வாழ்க்கையை சிதைத்து விடும். எனவே, இதுகுறித்து மீன்வளத்துறை வல்லுநர்கள் குழு அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags : beach ,government ,Kollidam ,Koozhiyar ,Fishermen , Kollidam, on the beach, straight wall, fear of fishermen
× RELATED ஈஞ்சம்பாக்கம் கடற்கரையில் பாட்டிலால் குத்தி வாலிபர் கொலை