கொடுக்கல் வாங்கல் தகராறில் முன்விரோதம்: பிரபல ரவுடி கொலையில் வாலிபர் கைது: 4 பேருக்கு வலை

செங்கல்பட்டு: செங்கல்பட்டில் நேற்று முன்தினம் நள்ளிரவில் பிரபல ரவுடி சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ஒருவரை கைது செய்த போலீசார், 4 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. செங்கல்பட்டு நத்தம் களத்துமேடு பகுதியை சேர்ந்தவர் விமல் (எ) குள்ள விமல் (34). பிரபல ரவுடி. இவர் மீது கொலை, 2 கொலை முயற்சி உள்பட பல்வேறு வழக்குகள் பல காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு விமல், சுமார் 10 மணியளவில் வீட்டில் சாப்பிட்டு விட்டு தூங்கி கொண்டிருந்தார். அப்போது, செங்கல்பட்டு கேகே தெருவை சேர்ந்த சுரேஷ் (30) உள்பட 2 பேர் அங்கு சென்றனர்.

தூங்கி கொண்டிருந்த விமலை, ஆட்டோவில் அழைத்து கொண்டு வெளியே சென்றனர். செங்கல்பட்டு - காஞ்சிபுரம் சாலையில் தனியார் திரையரங்கம் அருகே சென்றபோது, ஆட்டோவில் தயாராக இருந்த 2 பேருடன் சேர்ந்து, விமலை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். தலை, முகம், கழுத்து என உடல் முழுவம் பலத்த வெட்டு விழுந்தது. இதில், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே விமல் துடிதுடித்து இறந்தார். தகவலறிந்து செங்கல்பட்டு எஸ்பி கண்ணன், டவுன் இன்ஸ்பெக்டர் விநாயகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நேற்று அதிகாலையில், அதே பகுதியில் பதுங்கி இருந்த சுரேஷை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், பிரபல ரவுடி பட்டரைவாக்கம் சிவா தலைமையிலான கோஷ்டியில் விமல் இருந்தார். சிவா மீது 30 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்தவேளையில், கொடுக்கல் வாங்கல் தகராறில் கடந்த 1 மாதத்துக்கு முன்பு சிவாவின் கோஷ்டியில் இருந்து விமல் பிரிந்தார். இதனால், அவர்களுக்குள் முன்விரோதம் ஏற்பட்டது. இதையொட்டி, சிவாவை செல்போனில் தொடர்பு கொண்ட விமல், தகாத வார்த்தையால் திட்டியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த சிவா, விமலை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். அதன்படி ஆட்டோவில் அடியாட்களை அனுப்பி, விமலை வீட்டில் இருந்து அழைத்து சென்று கொலை செய்தனர் என தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். மேலும், சிவா உள்பட 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

2 மாதத்தில் 5 கொலைகள்

செங்கல்பட்டு பகுதியில், கடந்த 2 மாதத்தில், பாலூர் பழைய சீவரத்தில் சிறை துறை போலீஸ், புதுப்பாக்கத்தில் சேகர், மறைமலைநகரில் பாஸ்ட்புட் கடை நடத்தி வந்த வாலிபர், சிங்க பெருமாள் கோவிலை சேர்ந்த குண்டுபாபு, நேற்று முன்தினம் விமல் என 5 கொலைகள் நடந்துள்ளன. இதனால்,  பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

Related Stories:

>