×

திருப்போரூர் பேரூராட்சியில் அவலம்: தரமில்லாமல் நடக்கும் பாதாள சாக்கடை திட்டப்பணிகள்: வீணாகும் அரசு நிதி

திருப்போரூர்: திருப்போரூர் பேரூராட்சியில் தரமில்லாமல் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடக்கிறது. இதனால், அரசு நிதி வீணாவதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். திருப்போரூர் பேரூராட்சியில் கடந்த 2011ம் ஆண்டு 33 கோடியில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால், பணிகள் தொடங்கவும், ஒப்புதல் கிடைக்கவும் தாமதமானதால் 2016ம் ஆண்டு புதிய திட்ட மதிப்பீடு தயாரித்து, 53 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பாதாள சாக்கடை பணிகள் தொடங்கி நடக்கின்றன. குறிப்பாக நான்கு மாடவீதிகள், கச்சேரி சந்து தெரு, ஏரிக்கரை தெரு, சான்றோர் தெரு, வணிகர் தெரு, திரவுபதி அம்மன் கோயில் தெரு, பழைய மாமல்லபுரம் சாலை ஆகிய இடங்களில் தெருக்களின் நடுவில் பள்ளம் தோண்டி, குழாய்கள் பதிக்கும் பணி நடக்கிகிறது.

ஒரு குறிப்பிட்ட தெருவில் பணிகளை முடித்து அடுத்த தெருவில் பணிகளை தொடங்காமல், பல தெருக்களிலும் ஒரே நேரத்தில் சாலைகளை தோண்டி பள்ளங்களை ஏற்படுத்தியுள்ளளதால், அந்தந்த தெருக்களில் வசிக்கும் மக்கள், தங்களது வீடுகளுக்கு செல்ல முடியாத நிலை உள்ளது.
மேலும், இதுபோல் பதிக்கப்படும் குழாய்கள், கான்கிரீட் இணைப்புகள், பழுது நீக்குவதற்காக அமைக்கப்படும் மேன்ஹோல் எனப்படும் சந்திப்புகள் ஆகியவை தரமற்ற முறையில் அமைக்கப் படுவதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. பல இடங்களில் அமைக்கப்பட்ட கான்கிரீட் மூடிகள் மற்றும் கட்டமைப்புகள் இடிந்து சரிந்து விட்டன. நேற்று முன்தினம் கிழக்கு மாடவீதியில் ஒரு கான்கிரீட் கட்டமைப்பு சரிந்தது.

தற்போது விட்டு விட்டு மழை பெய்து வருவதால், இந்த பாதாள சாக்கடை பள்ளங்களில் மண் சரிந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது.
பாதாள சாக்கடை பணிகளால் பொது மக்களுக்கு ஏற்படும் இடையூறு குறித்து பேரூராட்சி நிர்வாகம் சார்பில் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரருக்கு கடிதங்கள் அனுப்பியும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அதிகாரிகள் கூறுகின்றனர். இதில், திருப்போரூர் பேரூராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்தை மேற்கொள்ளும் தனியார் ஒப்பந்ததாரர்கள், உரிய தரம் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு பணிகளை செய்கிறார்களா எனகண்காணிக்க வேண்டிய குடிநீர் வடிகால் வாரியம் கண்டு கொள்ளாமல் உள்ளது என பரபரப்பு புகார் எழுந்துள்ளது.

எனவே, மாவட்ட நிர்வாகம் இந்த பாதாள சாக்கடை பணிகளின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டு தரமான முறையில் கான்கிரீட் கட்டமைப்புகள் மற்றும் மூடிகளை அமைக்க வேண்டும். இந்த திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

குடிநீர் வழங்க முடியாத நிலை
பாதாள சாக்கடைப்பணிகளை மேற்கொள்வோர் முன் அறிவிப்பு ஏதும் இன்றி தெருக்களில் பள்ளங்களை தோண்டும்போது, ஏற்கெனவே புதைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய்களை உடைத்து விடுகின்றனர். இதனால் பல தெருக்களில் குடிநீர் குழாய்கள் உடைந்து தண்ணீர் வீணாகிறது. இதையெட்டி, பேரூராட்சி மக்களுக்கு முறையாக குடிநீர் வழங்க முடியாத நிலை ஏற்படுகிறது.

Tags : Disgrace in Thiruporur Municipality: Poor Underground Sewerage Projects: Wasted Government Funds
× RELATED வேளச்சேரி – பரங்கிமலை இடையிலான...