ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் 27 ஆண்டுகளாக வீணாகும் கட்டிடங்கள்

* அதிகாரிகள் அலட்சியம்

* பொதுமக்கள் குற்றச்சாட்டு

ஆவடி: ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு கடந்த 1992ம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த குடியிருப்பு சுமார் 125 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இங்கு 6 பிளாக்குகளில் 3700 மனைகள் விற்பனைக்கு ஒதுக்கப்பட்டன. இந்த மனைகள் குலுக்கல் முறையில் தேர்ந்து எடுக்கப்பட்டு மக்களுக்கு ஒதுக்கப்பட்டன. தற்போது, இந்த குடியிருப்பில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த குடியிருப்பு அமைக்கும்போது சுகாதார நிலையம், வணிக வளாகம், குடிநீர் மேல்நிலை தொட்டி ஆகியவற்றிற்கான கட்டிடங்கள் கட்டப்பட்டன. இவைகள் அனைத்தும் 27 ஆண்டுக்கு மேலாக பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாமல் கிடக்கிறது.

இதனால் காரணமாக மேற்கண்ட கட்டிடங்கள் விரிசல் அடைந்து முற்றிலுமாக சேதம் அடைந்து வருகிறது. மேலும், இந்த கட்டிங்கள் பல பகுதிகளில் மரங்கள், செடிகள் வளர்ந்து சேதம் அடைந்து வருகின்றன. இதனால் இந்த கட்டிடங்களை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. பாழடைந்த கட்டிடங்கள் தற்போது குடிமகன்களின் கூடாரமாக தான் திகழ்கிறது. மேலும், இங்கு சமூக விரோத செயல்கள் அடிக்கடி நடக்கிறது. இங்குள்ள கட்டிடங்களில் மது அருந்தி விட்டு காலி பாட்டிகளை சாலையில் உடைத்து எறிந்து விட்டு குடிமகன்கள் செல்லுகின்றனர். இந்த பாட்டில்கள் தெருக்களில் நடந்து செல்லும் பாதசாரிகளின் கால்களை பதம் பார்க்கின்றன.

மேலும், பாழைந்த கட்டிடங்களில் பாம்பு, தேள் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் அதிக அளவில் நடமாட்டம் உள்ளது. இவைகள் இரவு நேரங்களில் அழையா விருந்தாளிகள் போல் குடியிருப்புகளில் படையெடுத்து வருகின்றனர். இதனால், குடியிருப்புவாசிகள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், “எங்கள் பகுதியில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு உருவாகி 27 ஆண்டுகள் ஆகியும் எவ்வித அடிப்படை வசதியும் இன்றி குடியிருப்புவாசிகள் இன்னல் அடைந்து வருகிறோம். குறிப்பாக, குடியிருப்பு உருவாக்கும்போது இங்கு பேருந்து நிலையம் அமைக்க 32 கிரவுண்ட் பரப்பளவில் நிலம் ஒதுக்கப்பட்டது.

ஆனால் இதுவரை  பேருந்து நிலையம் அமைக்கப்படாமல் உள்ளது. பேருந்து நிலையம், தபால் நிலையம், நூலகம், வங்கி அமைக்க நிலங்களும் ஒதுக்கப்பட்டன. ஆனால் அவைகளும் சம்பந்தப்பட்ட துறையினரிடம் ஒப்படைக்கப்படாமலேயே உள்ளது. இதனால்  3 கி.மீட்டர் தூரம் சென்று தான் மக்கள் பயன்படுத்திட வேண்டிய அவல நிலை உள்ளது. மேலும், குடிநீர் தொட்டியும் பயன்பாட்டிற்கு வராமல் கிடப்பாதால், ஒரு குடம் தண்ணீரை ₹10க்கு தனியாரிடம் வாங்கி மக்கள் குடிக்கிேறாம். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசு துறைகளின் அதிகாரிகள் அலட்சியமாகவே உள்ளனர்” என்றனர்.

புதிய கட்டிடம் கட்ட கோரிக்கை

சமூக ஆர்வலர்கள் கூறுகையில், “குடியிருப்பு பகுதியில் உள்ள ஒதுக்கப்பட்ட இடங்களை சம்பந்தப்பட்ட துறைகளிடம் ஒப்படைக்கவில்லை. இதுகுறித்து அந்தந்த துறைகளுக்கு தகவல் பலமுறை அனுப்பி உள்ளோம். ஒதுக்கப்பட்ட இடங்களை சம்பந்தப்பட்ட துறையினர் வீட்டு வசதி வாரியத்திடம் அதற்குரிய விலையை செலுத்தி ஒதுக்கீடு பெற்று கொள்ள வேண்டும் என்பது விதி. ஆனால் அந்தந்த துறைகள் இன்னும் அதற்கான விலையை தரவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

இதே பதிலை தான் கடந்த பல ஆண்டாக அதிகாரிகள் கூறி வருகின்றனர். இதனால் கட்டிடங்கள் வீணாகி விட்டன. இதனை இடித்து விட்டு, புதிய கட்டிடம் கட்டி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். மேலும், ஒதுக்கப்பட்ட இடங்களை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

Related Stories:

>