சவுகார்பேட்டை துப்பாக்கி சூடு சம்பவம்; பணத்துக்காக கணவன், மாமனார், மாமியாரை தீர்த்துக்கட்டினேன்: மருமகள் பரபரப்பு வாக்குமூலம்

தண்டையார்பேட்டை: சவுகார்பேட்டை துப்பாக்கி சூடு வழக்கில் கைது செய்யப்பட்ட இளம்பெண், ‘‘சொகுசாக வாழ பணம் தேவைப்பட்டதால் கணவன், மாமனார், மாமியாரை தீர்த்துக்கட்டினேன்,’’ என வாக்குமூலம் அளித்துள்ளார். சவுகார்பேட்டை விநாயகம் மேஸ்திரி தெருவை சேர்ந்தவர் தலில் சந்த் (74). ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த இவர், இங்கு பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார். கடந்த 11ம் தேதி தலில் சந்த், அவரது மனைவி புஷ்பா பாய் (70), மகன் ஷீத்தல் (36) ஆகியோர் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டனர். இதுகுறித்து யானைகவுனி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். அதில், பைனான்சியர் உட்பட 3 பேரை சுட்டுக்கொன்றது அவரது மருமகள் ஜெயமாலா என தெரியவந்தது.

தனிப்படையினரின் தீவிர தேடுதல் வேட்டையில் முக்கிய குற்றவாளியும், ஜெயமாலாவின் சகோதரருமான புனேவை சேர்ந்த கைலாஷ் (32), கொல்கத்தாவை சேர்ந்த ரவீந்தரநாத் கர் (25), உத்தம் கமல் (28) ஆகியோரை கடந்த வாரம் மகாராஷ்டிரா மாநிலத்தில் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து, டெல்லி ஆக்ராவில் பதுங்கி இருந்த ஜெயமாலா (38), விலாஷ் (28), ராஜிவ் ஷிண்டே  ஆகியோரை தனிப்படையினர் கைது செய்து, நேற்று சென்னை அழைத்து வந்தனர். விசாரணையில், ஜெயமாலா அளித்த வாக்குமூலமாக போலீசார் கூறியது: நான் ஆடம்பரமாக வாழ நினைப்பவள். நினைத்த ஆடை, ஆபரணங்களை வாங்குவதில் ஆர்வம் கொண்டவள்.

ஆனால், திருமணத்திற்கு பிறகு மாமனார், மாமியார் இதற்கு தடை விதித்தனர். இது எனக்கு பிடிக்கவில்லை. கணவருக்கு தெளிவான மன நிலையும் கிடையாது. என்னை ஏமாற்றி திருமணம் செய்து, என் வாழ்வை சீரழித்துவிட்டனர். இதனால் மன உைளச்சலில் நரகத்தில் இருப்பதுபோல உணர்ந்தேன். ஒரு கட்டத்தில் என்னால், கணவர் வீட்டில் இருக்கவே முடியாத நிலை ஏற்பட்டது. அதனால், இரு மகள்களுடன், என் பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டேன். என் குழந்தைகளின் எதிர்காலம் கருதி, புனேவில், உறவினர்கள் மத்தியில் பலமுறை பேச்சுவார்த்தை நடந்தது. மாமனார் மற்றும் கணவரிடம்  ₹7 கோடி கேட்டோம். ஒரு பைசா கூட தர முடியாது என மூவரும் கூறிவிட்டனர்.

இதனால், அவர்களை கொன்று பணம், சொத்துகளை அபகரிக்க முடிவு செய்தேன். என் சகோதர் விலாஷ் வழக்கறிஞர் என்பதால், இவர் மூலம், ஓய்வுபெற்ற ராணுவம் மற்றும் விமானப்படை அதிகாரிகள் வாயிலாக 2 துப்பாக்கிகளை வாங்கி, கணவர் உள்ளிட்ட மூன்று பேரையும் சுட்டுக்கொன்றோம். மூவரையும் கொன்றுவிட்டு, வீட்டில் உள்ள நகை, பணத்தை அள்ளிச் செல்ல திட்டமிட்டோம். ஆனால், வீட்டில் ₹1.80 லட்சம் மட்டுமே இருந்தது. அதை எடுத்துக்கொண்டு, இறந்து கிடந்த மாமியார் கைகளில் இருந்த 4 தங்க வளையல்களையும் உருவிக்கொண்டு தப்பினோம்.

இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து, கைதான ஜெயமாலா உள்ளிட்ட மூவரை ஜார்ஜ் டவுன் குற்றவியல் நீதிபதி முரளி கிருஷ்ணா ஆனந்த் வீட்டில் ஆஜர்படுத்தி, சைதாப்பேட்டை கிளை சிறையில் அடைத்தனர்.

பிடிபட்டது எப்படி?

கணவன், மாமானார் மற்றும் மாமியாரை சுட்டுக் கொன்றுவிட்டு தப்பிய ஜெயமாலா, சகோதர்கள் விலாஷ் மற்றும் ராஜிவ்  ஷிண்டேவுடன் ஆக்ராவில் ஒரு ஓட்டலில் தங்கி இருந்துள்ளார். அப்போது, பதற்றத்தில் கையில் வைத்திருந்த செல்போனில் கால் பட்டனை அழுத்தியுள்ளார். ஏற்கனவே, ஜெயமாலாவின் செல்போன் சிக்னலை கண்காணித்து வந்த தனிப்படையினர், அதை வைத்து அவர்கள் தங்கியிருந்த ஓட்டலை சுற்றிவளைத்து, அவர்களை கைது செய்துள்ளனர்.

Related Stories:

>