விதிகளுக்கு புறம்பான சுங்கச்சாவடிகளை அகற்றக்கோரி சோழிங்கநல்லூரில் 28ம் தேதி திமுக சார்பில் ஆர்ப்பாட்டம்: மா.சுப்பிரமணியன் எம்எல்ஏ அறிவிப்பு

சென்னை: சட்டவிதிகளுக்கு புறம்பான சுங்கச்சாவடிகளை அகற்றக்கோரி சோழிங்கநல்லூரில் வரும் 28ம் தேதி திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன் எம்எல்ஏ அறிவித்துள்ளார்.

சென்னை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் மா.சுப்பிரமணியன் எம்எல்ஏ நேற்று வெளியிட்ட அறிக்கை: மாநகராட்சி எல்லையில் இருந்து 10 கிலோ மீட்டருக்கு அப்பால் மட்டுமே சுங்கச் சாவடிகள் அமைக்க வேண்டும் என்பது சட்ட விதி. ஆனால், இதை மீறி எடப்பாடி தலைமையிலான தமிழக அரசு சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெருங்குடி, துரைப்பாக்கம் 200 அடி சாலை, சோழிங்கநல்லூர் கலைஞர் கருணாநிதி சாலை,

சோழிங்கநல்லூர்-மேடவாக்கம் இணைப்பு சாலை மற்றும் உத்தண்டி ஆகிய பகுதிகளில் சுங்கச்சாவடிகளை அமைத்துள்ளது. இதனை அகற்ற ேவண்டும் என்று தென் சென்னை எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் நாடாளுமன்றத்தில் பேசியதுடன், மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரியை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். சோழிங்கநல்லூர் எம்எல்ஏவும், கடந்த பிப்ரவரியில் நடந்த சட்டமன்ற கூட்ட தொடரின்போது இந்த சுங்கச்சாவடிகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்கிற கோரிக்கையை நேரடியாக வைத்தார். மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறனும், இந்த சுங்கச்சாவடிகள் அகற்றப்பட வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு கடந்த 5ம் தேதி கடிதம் அளித்தார்.

ஆனால், எதற்கும் செவி சாய்க்காத தமிழக அரசினை கண்டித்து, வருகிற 28ம் தேதி காலை 10 மணியளவில், சோழிங்கநல்லூர் கலைஞர் சாலையில் என்னுடைய தலைமையிலும், எம்எல்ஏக்கள் அரவிந்த் ரமேஷ், வாகை சந்திரசேகர், பகுதி செயலாளர்கள் எஸ்.வி.ரவிச்சந்திரன், வி.எ.மதியழகன் முன்னிலையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இதில் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன்,  தமிழச்சி தங்கபாண்டியன், கலாநிதி வீராசாமி ஆகியோர் பங்கேற்க உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>