×

வேளாண்துறையில் ஊழியர்களுக்கு மாத ஊதியத்தில் ரூ15,000 திடீர் குறைப்பு: அரசு ஆணையால் அதிர்ச்சி

தஞ்சை,நவ.22: வேளாண்துறையில் ஊழியர்களுக்கு மாதம் ரூ.15 ஆயிரம் வரை திடீரென சம்பளத்தை குறைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழக அரசின் வேளாண்துறையில் பல்வேறு நிலையில் உள்ள ஊழியர்களுக்கு கடந்த காலங்களில் வழங்கப்பட்டு வந்த மாதாந்திர ஊதியத்தை மாற்றி அமைத்து அரசு புதிய அரசாணையை வெளியிட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக அரசு பிறப்பித்த 401, 12.11.2020 அரசாணையின்படி, வேளாண்மை அலுவலர் பதவிகளில் உள்ளவர்களுக்கு மாதாந்திர ஊதியம் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை தொடர்ந்து 8,500 - 15,000 ரூபாய் வரை மாத ஊதியத்தில் குறையும் நிலை ஏற்பட்டுள்ளது. முன்னாள் தலைமை நீதிபதி முருகேசன் தலைமையில் ஊதிய குறைதீர்க்கும் குழு அமைக்கப்பட்டு, ஊதிய கட்டமைப்பில் உள்ள குறைபாடு தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை தயார் செய்யப்பட்டது. அதன் அடிப்படையில், பலதுறை அரசு ஊழியர்கள் சம்பளத்தை மாற்றி அமைக்க தமிழக அரசு சார்பில் அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. தமிழக அரசின் அந்த அரசாணையில், வேளாண்மை துறையில் வேளாண்மை அலுவலர்கள் உட்பட பலருக்கு அடிப்படை சம்பளத்தை குறைத்து நிர்ணயம் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த கொரோனா காலத்தில் உயிரையும் பொருட்படுத்தாமல் பணியாற்றி வரும் நிலையில், இந்த திடீர் சம்பள குறைப்பு நடவடிக்கைகள் ஊழியர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பல மத்திய, மாநில திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்திய நிலையில், எங்கள் துறை ஊழியர்கள் இந்த திடீர் ஊதியக்குறைப்பால் வீட்டுக்கடன், வாகனக்கடன், குழந்தைகளுக்கான பள்ளி கட்டணம் இவற்றையெல்லாம் செலுத்துவது கடினம். இதனால் குடும்பத்தினர் மிகுந்த மன உளைச்சல் மற்றும் வேதனையில் உள்ளனர் என தெரிவித்துள்ளனர்.

Tags : Rs 15,000 abrupt reduction in monthly wages for agricultural workers: Shocked by government order
× RELATED பணம் கொடுத்து ஆட்களை அழைத்துச்சென்று...