×

அரியர் தேர்வு ரத்தில் விதிமீறல் இல்லை: ஐகோர்ட்டில் அரசு பதில் மனு

சென்னை: கொரோனா ஊரடங்கு காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டதால், அரியர் தேர்வுகளை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து, அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்குகளில் பதிலளித்த அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில், அரியர் தேர்வுகளை ரத்து செய்தது விதிகளுக்கு முரணானது எனத் தெரிவித்திருந்தது. வழக்குகள் நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது அரியர் தேர்வுகள் ரத்து விவகாரத்தில் பல்கலைக்கழக மானியக் குழுவின் பதில் மனுவில் தமிழக அரசின் ரத்து அறிவிப்பு குறித்து எதுவும் குறிப்பிடவில்லை என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இந்த வழக்கில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது: கொரோனா பரவல் காரணமாக கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டதால் மாணவர்கள் உடனே தங்கள் விடுதிகளை காலி செய்து தங்கள் சொந்த ஊருக்கு சென்றுவிட்டனர். அவர்களால் புத்தகங்கள், நோட்டுகள், லேப்டாப்புகள் போன்றவற்றை எடுத்து செல்ல முடியவில்லை. இதனால், அவர்களால் படிப்பை தொடர முடியாத நிலை ஏற்பட்டது.  இந்த நிலையில்  கொரோனா சிகிச்சை மையங்களாக கல்லூரிகள் மாற்றப்பட்டன. இதனால், மாணவர்களால் தாங்கள் படித்த கல்லூரிகளுக்குள் நுழைய முடியாத நிலை ஏற்பட்டது.

மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அவர்களின் செமஸ்டர் தேர்வுகள் மற்றும் அரியர் தேர்வுகளை ரத்து செய்ய அரசு முடிவு செய்தது. இந்த நடைமுறை முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு இளநிலை படிப்புகளுக்கும், பொறியியல் கல்வி பயிலும் 1 முதல் 3ம் ஆண்டு மாணவர்களுக்கும், முதுநிலை முதல் ஆண்டு மாணவர்களுக்கும் மட்டும் செயல்படுத்தப்பட்டுள்ளது. இறுதி ஆண்டு மாணவர்கள் குறித்து எந்த அறிவிப்பும் செய்யப்படவில்லை.  உச்ச நீதிமன்ற உத்தரவில், சூழ்நிலைக்கேற்ப மாநில அரசு அந்தந்த மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கு தரப்பட்ட அதிகாரத்தின்கீழ் முடிவெடுக்க முடியும்.

பல்கலைக்கழக மானியக்குழுவின் அறிவுறுத்தலில் ஒவ்வொரு பல்கலைக்கழகமும் கொரோனா சூழ்நிலைக்கேற்ப முடிவெடுக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் பல்கலைக்கழக மானியக்குழுவின் வழிகாட்டுதல்கள் மீறப்படவில்லை.  எனவே, அரியர் தேர்வுகளை ரத்து செய்த தமிழக அரசின் உத்தரவை எதிர்த்த வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : examination ,Government ,Aryan , No irregularity in cancellation of Aryan examination: Government reply petition in iCourt
× RELATED இளநிலை நீட் தேர்வுக்கான விண்ணப்ப...